இன்றாவது அரையிறுதி நடக்குமா? வெதர்மேனின் மழை கணிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால் நேற்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ரிசர்வ் டே' விதிமுறையின்படி இன்று அதே மைதானத்தில் 46.2வது ஓவரில் இருந்து போட்டி தொடங்கும். நியூசிலாந்து 50 ஓவர்கள் விளையாடி முடித்த பின்னர், நியூசிலாந்து தரும் இலக்கை நோக்கி இந்தியா விளையாடும். ஆனால் இன்றும் மழை வந்தால் என்ன ஆவது? என்பதே ரசிகர்களின் கவலையாக உள்ளது. இன்றும் மழை வந்து போட்டி ரத்தானால் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பதால் நியூசிலாந்து ரசிகர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியினர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'இன்று மான்செஸ்டரில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்பதால் அரையிறுதி போட்டிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது' என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த டுவீட் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.