கதிராமங்கலம் மக்களுக்காக உயிரையே கொடுக்க துணிந்த டிராபிக் ராமசாமி

  • IndiaGlitz, [Saturday,July 15 2017]

தஞ்சை அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோல், கேஸ் ஆகியவற்றை கடந்த பல ஆண்டுகளாக எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும் இங்குள்ள வயல்களில் உள்ள பயிர்கள் கருகிவிடுவதாகவும் இப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் கதிராமங்கலத்தில் எண்ணெய்க்குழாயில் உடைப்பு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பத்து பேர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட 10 பேர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று விவசாய அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் பிரபல சமூக சேவகரான டிராபிக் ராமசாமி இதற்காக தனது உயிரையும் கொடுக்க துணிந்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தின் 4 வது மாடியில் நின்று கொண்டு கதிராமங்கலம் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிராபிக் ராமசாமியிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.