close
Choose your channels

நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால்: டி.ராஜேந்தரின் விறுவிறுப்பான பேட்டி

Wednesday, September 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரசியல் களத்தில் அவ்வப்போது புயலை கிளப்பிவிட்டு செல்லும் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, 'நான் சொன்னதை சசிகலா கேட்டிருந்தால் இன்று அவர் குளுகுளு அறையில் இருந்திருப்பார் என்றும் சிறையில் இருந்திருக்க மாட்டார்' என்றும் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'நான் அப்பவே சொன்னேன் அந்த அம்மாவுக்கு. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனபோது அதை நான் எதிர்க்கவில்லை. அது அவர்கள் கட்சி பிரச்சனை. ஆனால், அவர் முதல் அமைச்சராக முயற்சி செய்தபோது நான் வேண்டாம் என்றேன். இது ஒரு சூழ்ச்சி. உங்களுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி, நீங்கள் அடைந்து விடுவீர்கள் வீழ்ச்சி என்று நான் கூறினேன்.

சசிகலா தமிழ்நாட்டின் முதல்வராக முடியாது என்று அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்கிறார்கள் என நான் முன்னர் கூறினேன். என்னுடைய கணிப்பு என்ன ஜாதகமா? என்று சிலர் கேட்டனர். நான் சொன்னது ஜாதகமல்ல. சசிகலாவுக்கு சூழ்நிலை இல்லை சாதகம், அதனால் விளையும் பாதகம் என்று நான் முட்டுக்காட்டை போட்டேன்.

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலின்போது ஜெயலலிதாவால் மதிக்கப்பட்டு அழைக்கப்பட்டு பிரசாரத்துக்கு சென்றவன் நான். அதன்பிறகு, புதுக்கோட்டை தேர்தலின்போதும் தி.மு.க. நிற்காமல் தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வும் போடியிட்டபோதும் நான் பிரசாரத்துக்கு சென்றேன்.

ஜெயலலிதாவுடனும், சசிகலாவுடனும் பல காலகட்டத்தில் நட்போடு, பல விஷயத்தில் உறுதுணையாக, பக்கபலமாக, கலந்தாலோசனை செய்யும் இடத்தில் இருந்த நான், நீங்கள் கட்சியின் பொதுச்செயலாளரானதோடு இருந்து விடுங்கள். அதற்குமேல் நீங்கள் முதலமைச்சர் ஆகாதீர்கள் என நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.., இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே..

இவ்வாறு டி.ராஜேந்தர் தனது பேட்டியில் கூறியிருந்தார் 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.