நடராஜனை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்! சுகாதாரத்துறை அதிரடி
தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபாரமாக பந்து வீசியதல், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் நெட் பவுலராக பங்கேற்றார். நடராஜனுக்கு முதலில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் டி20 தொடரில் விளையாடிய நடராஜன் மிக அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 தொடரை இந்திய அணி வெல்ல ஒரு காரணமாகவும் இருந்தார்
இந்த நிலையில் நடராஜனுக்கு நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது என்பதும் அந்த போட்டியிலும் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
நடராஜன் இடம்பெற்ற அந்த போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது என்பதும் இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரே தொடரில் மூன்று வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான நடராஜனை வரவேற்க அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் மிகப்பெரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சேலம் சின்னப்பம்பட்டியில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடை திடீரென அகற்றப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளி நபர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது