சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்: அப்ரூவராக மாறும் அதிகாரிகள்

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டதும், அதனை தொடர்ந்து இன்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சாத்தான்குளம் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் அவர்கள் சற்று முன்னர் பேட்டியளித்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் ஏற்கனவே இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக தலைமை காவலர் ரேவதி அவர்கள் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் முன் அளித்த சாட்சியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சிபிசிஐடி போலீஸ் தரப்பு சாட்சியாக சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மாறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

மேலும் காவலர் முத்துராஜும் அப்ரூவராக சாட்சியம் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. எனவே தலைமை காவலர் ரேவதியை அடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் முத்துராஜும் சாட்சி அளிக்க உள்ளதால் இந்த வழக்கு மிகவும் வலுவானதாக மாறிவிட்டதாகவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது