வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ரியல் சுந்தர் ராமசாமி

  • IndiaGlitz, [Tuesday,November 13 2018]

சமீபத்தில் வெளியான 'சர்கார்' படத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் சுந்தர் ராமசாமி என்ற ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ கேரக்டரில் நடித்த விஜய், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டிருப்பார். இதேபோல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தற்போது வந்துள்ள டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் சி.இ.ஓ ஜாக் டோர்ஸி என்பவர் இந்திய மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசியுள்ளார்.

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள டுவிட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்ஸி முதல்கட்டமாக ராகுல்காந்தி உள்பட முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார். பொய் செய்திகள் வேகமாக பரவுவது, பொய்யான தேர்தல் பிரச்சாரம், பொய்யான ஹேஷ்டேக் வைரல் ஆகியவற்றை தடுப்பது குறித்து அவர் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் டெல்லி ஐஐடி மாணவர்களிடையே உரையாடிய ஜாக், தான் சி.இ.ஓ ஆன சுவாரஸ்யமான கதை, டுவிட்டரின் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பேசினார். அவருடைய பேச்சு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் மக்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் அவரது பேச்சு இருந்ததால் அவரை நெட்டிசன்கள் ரியல் 'சுந்தர் ராமசாமி' என்றே அழைத்து வருகின்றனர்.