மதுவுக்கு பதில் சேவிங் லோஷனை குடித்த இருவர் பரிதாப பலி!

கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதை விட மதுவுக்கு அடிமையானவர்களை பாதுகாப்பது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் போல் தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக்கடைகளும் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருப்பதால் மதுவுக்கு அடிமையானவர்கள் பலர் விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் 7 பேர் மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் மதுவுக்கு பதில் மாற்று ஏற்பாடுகளையும் ஒரு சிலர் செய்து வருவதும் பெரும் விபரீதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 2 பேர் மதுவுக்கு பதிலாக ஷேவிங் லோஷனை குடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் என்ற பகுதியைச் சேர்ந்த மூவர் கடந்த சில வருடங்களாகவே மதுவுக்கு அடிமையாகி இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து கடந்த 10 நாட்களாக மது கிடைக்காததால் அவர்கள் பெரும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சேவிங் லோசனிலும் ஆல்கஹால் இருப்பதாக ஒரு சிலர் கூறியதையடுத்து மதுவுக்கு பதிலாக சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். இதனை அடுத்து ஷேவிங் லோஷனை குடித்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது சேவிங் லோஷனை குடித்து இறந்தவர்கள் ராஜா மற்றும் அருண்பாண்டி என்பது தெரிய வந்துள்ளதாகவும், இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருவதாகவும் தெரிகிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் வேறு பொருள்களைக் குடித்து விபரீதத்தில் ஈடுபட வேண்டாம் என போலீசார் பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்