Download App

Ulkuthu Review

உள்குத்து: கந்துவட்டி கொடுமைக்கு ஒரு குத்து

'உள்குத்து' என்பது உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை செய்வது என்று அர்த்தம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் கதையும் அதை சார்ந்துதான் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்

சரத் லோகித்ஷவா மீனவக்குப்பத்தில் கந்துவட்டி கொடுக்கும் ஒரு ரெளடி. அவரிடம் உள்ள சுமார் பத்து அடியாட்கள் அவர் கொடுக்கும் கந்துவட்டியை அடாவடியாக வசூல் செய்கின்றனர். இவரிடம் அடியாளாக வேலை பார்க்கும் ஒருவர் தான் தினேஷின் அக்கா சாயாசிங்கின் கணவர் ஜான் விஜய். சரத் லோகித்ஷாவின் மகன் திலீப் சுப்பராயன் ஒரு பிரச்சனையால் ஜான் விஜய்யையும், சாயாசிங்கையும் கொன்று விடுகிறார். அக்காவையும் அக்கா கணவரையும் கொலை செய்த திலீப் சுப்பராயனையும், அவரது தந்தை சரத்லோகித்ஷாவையும், அவருடைய அடியாளில் ஒருவராக இருக்கும் ஸ்ரீமான் உதவியுடன் ஒருசில உள்குத்து வேலைகளுடன் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை

திருடன் போலீஸ்' படத்தில் போலீசாக நடித்த தினேஷ் இந்த படத்தில் ரெளடியாக நடித்துள்ளார். ஒரு ரெளடியாக அவர் தனது முகத்தில் கொடூரத்தை காட்ட முயற்சித்தாலும் அவரது உடலமைப்பு ரெளடியாக பொருந்தவில்லை. சரத் லோகித்ஷாவின் முன் தினேஷ் நிற்கும்போது அவரது மகன் போல உள்ளார். வித்தியாசமாக எதுவும் இல்லாமல் வழக்கமான நடிப்பையே தினேஷ் இந்த படத்திலும் கொடுத்துள்ளார்

நந்திதாவுக்கு படத்தில் காட்சிகள் குறைவு என்றாலும் ஓகே என்று சொல்லும் வகையில் நடிப்பு. தினேஷ் ஒரு அப்பாவி இல்லை, அடியாள் என்று தெரிந்தவுடன் பொங்கும் காட்சியில் நந்திதா ஸ்கோர் செய்கிறார்.

படத்தின்  கலகலப்பை மொத்த குத்தகை எடுத்து கொள்கிறார் பாலசரணவன். தன்னை பெரிய ரெளடி என்று தினேஷ் அறிமுகம் செய்யும்போது அவருடைய மைண்ட் வாய்சும், பாடி லாங்க்வேஜூம் சிரிப்பை வரவழைக்கின்றது.

ஒருசில காட்சிகளில் வந்தாலும் ஜான் விஜய் மனதில் நிற்கிறார். தான் ரெளடி என்பது மனைவி சாயாசிங்கிற்கு தெரியாமல் பல வருடங்கள் மறைத்து வைத்துள்ளதாக அவர் கூறுவது நம்ப முடியவில்லை என்றாலும் ரசிக்க முடிகிறது. மனைவியிடம் கொஞ்சல், மச்சான் தினேஷை கலாய்ப்பது, ரெளடியாக இருந்தாலும் ஒரு பெண்ணை கைநீட்டி அடிக்கக்கூடாது என்று தனது முதலாளியிடமே ஆத்திரப்படுவது என ஜான் விஜய் மனதில் நிற்கிறார். இவருடைய மனைவியாக வரும் சாயாசிங் ஹோம்லுக்கை பார்க்கும்போது இவரா 'மன்மத ராசா' பாடலுக்கு ஆட்டம் போட்டவர் என்ற சந்தேகம் வருகிறது.

தினேஷ் நடித்த 'திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ மீண்டும் அவருடன் இணணந்த படம் தான் இந்த உள்குத்து. ஒரு ரெளடிக்கு பெண் கொடுக்க மாட்டார்கள், ரெளடி மகனை ஸ்கூலில் சேர்க்க மாட்டார்கள், சமூகத்தில் எந்த ஒரு மதிப்பும் மரியாதையும் இல்லை, பின்ன என்னத்துக்கு இந்த கேவலமான வேலையை பார்க்கணும் என்ற ஒரு கருத்தை இயக்குனர் இந்த படத்தின் கிளைமாக்ஸில் சொல்கிறார். ரவுடின்னா கெத்து இல்லை, அடுத்தவங்க மதிக்கற மாதிரி வாழணும், அதுதான் கெத்து' போன்ற வசனங்களில் இயக்குனர் பளிச்சிடுகிறார்.  கந்து வட்டி கும்பல் தலைவனிடம் வேலை செய்யும் நண்பர்களில் ஒருவனை தலைவன் கொலை செய்தால், மற்றவர்கள் அந்த கொலையை எப்படி எடுத்து கொள்வார்கள்? தலைவனை எப்படி கையாளுவார்கள் என்ற கான்செப்ட் மட்டும் கொஞ்சம் புதுமையாக இருப்பது படத்தின் சிறப்புகளில் ஒன்று. ஆனால் பல படங்களில் பார்த்த அதே பழிவாங்கும் கதை, ரெளடிக்கும் ரெளடிக்கும் மோதல் என்பது கொஞ்சம் சலிப்படைய செய்கிறது.  இருப்பினும் இடைவேளை டுவிஸ்ட், இரண்டாம் பாதியில் ஒருசில திருப்பங்கள் ஆகியவை சாதகமான அம்சங்கள் என்பதால் இயக்குனர் இந்த படத்தில் தேறி விடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்

பிகே வர்மாவின் கேமிரா கடற்கரையோடு உள்ள குப்பத்து காட்சிகளை இயல்பாக படம் பிடித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் சுமார் தான் என்றாலும் பின்னணி இசை ஓகே. திலீப் சுப்பராயனின் ஸ்டண்ட் காட்சிகள் இயல்பாக உள்ளதும் இந்த படத்தின் ப்ளஸ்

மொத்தத்தில் கதை பழசாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதை, ரியல் ஸ்டண்ட் காட்சிகள் ஆகியவற்றுக்காக ஒருமுறை பார்க்கலாம்

Read The Review in English: Ulkuthu

Rating : 2.5 / 5.0