கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Sunday,August 16 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 25 லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் பல விஐபிக்களும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து, அதில் ஒரு சிலர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய உத்தரப் பிரதேச மாநில அமைச்சருமான சேட்டன் சவுதான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 1970களில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விளையாடிய சேட்டன் சவுதான், பெரும்பாலும் சுனில் கவாஸ்கர் உடன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் கொரோனாவுக்கு பலியான இரண்டாவது அமைச்சர் சேட்டன் சவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.