close
Choose your channels

கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை!!! நட்பு நாடுகளின் அரசியல் அழுத்தம்!!! 50 ஆண்டுகால வரலாறு!!!

Friday, March 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை!!! நட்பு நாடுகளின் அரசியல் அழுத்தம்!!! 50 ஆண்டுகால வரலாறு!!!

 


கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கியூபா தற்போது உலகம் முழுக்க கவனம்பெற்று வருகிறது. காரணம் ஒவ்வொரு முறையும் பரவும் கொள்ளை நோய்களுக்கு எதிராக உலக நாடுகள் அல்லாடிக் கொண்டிருக்கும்போது, கியூபா மட்டும் அலட்டிக்கொள்ளாமல் தன்னுடைய மருத்துவத்துறையை மேலும் வலுவுடையதாக மாற்றிக்கொள்கிறது. இதற்கு கியூபாவின் தனித்த அரசியலமைப்பே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 

ஆசிய நாடுகள் இங்கிலாந்தின் ஆதிக்கத்தின்கீழ் சிக்கி தவித்ததுபோல ஒருகாலத்தில் கியூபா அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்நாட்டின் அனைத்து வளங்களும் அமெரிக்க நிறுவனங்களின் சொத்தாக மாறிப்போயிருந்தது. அதை எதிர்த்து அந்நாட்டில் ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா உருவில் உலகமே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு பெரும் புரட்சி வெடித்தது. விளைவு அனைத்துச் சொத்துக்களும் பொதுவுடைமை ஆக்கப்பட்டு கம்யூனிஸ ஆட்சி கட்டமைக்கப்பட்டது.  

வரலாற்றில் அமெரிக்க கியூபா பனிப்போர்
பிடல் காஸ்ட்ரோ பதிவிக்கு வருவதற்கு முன்பு 1959 வரை கியூபாவின் அனைத்து வளங்களும் அமெரிக்க நிறுவனங்களின் கைகளில்தான் இருந்தன. சர்க்கரை, புகையிலை, மரம், எண்ணெய், சுரங்கம் மற்றும் பண்ணைத் தொழில்கள், இயற்கை வளங்களில் குறிப்பிடத்தக்கப் பங்கு என அனைத்தும் அமெரிக்கர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. பிடல்காஸ்ட்ரோ பதவிக்கு வந்தப்பின்னர் அனைத்து இயற்கை வளங்களையும் பொதுவுடைமையாக அறிவித்து தேசியத்தின் ஆளுகைக்குக்கீழ் கொண்டுவந்தார். பொதுவுடைமையாக மாற்றப்பட்ட சொத்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு நேரடியாகத் திறந்துவிடப்பட்டன. இதில் அமெரிக்க நிறுவனங்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேர்ந்தது. எனவே அமெரிக்க அரசாங்கம் கியூபாவின் கம்யூனிச அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நடவடிக்கைக்காக அந்நாட்டின்மீது பொருளாதாரத் தடையை விதித்தது. 

பொருளாதாரத் தடை மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு எதிராக தீவிரவாதத்துக்கு நிதியுதவி திரட்டும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா கியூபாவையும் சேர்த்துக் கொண்டது. இந்தப் பட்டியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பல வருடங்களாக கியூபா ஐ.நா. சபையை நாடுகிறது. ஏன் இந்த நிலைமைக்கு கியூபா தள்ளப்பட்டது? கியூபா தீவிரவாதத்துக்கு துணை போனதா என்பதைப் பற்றியெல்லாம் தற்போது அரசியல் ஆர்வலர்கள் தூசித் தட்டிக்கொண்டு இருக்கின்றனர். 

காரணம் அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு கியூபாமீது பொருளாதாரத் தடையை விதிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த நாடுகளுள் ஒன்று இத்தாலி. அந்த இத்தாலிக்கு தற்போது கியூபா கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 52 மருத்துவர்கள் அடங்கிய குழுவை அனுப்பியதோடு மருந்துகளையும் கொடுத்து உதவி செய்துவருகிறது. எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் செயல்படும் கியூபா மீது மற்றநாடுகள் கொண்டிருக்கிற அரசியல் தன்மைகளைக் குறித்து தற்போது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 


உலகில் பெருமுதலாளிகளின் கைகள் எப்பொழுதும் ஓங்கியே இருக்கின்றன. இந்த அழுத்தத்தில் கியூபாவின் கம்யூனிசம் எவ்வளவு நாட்கள் தப்பிக்கப் போகிறது என ஆரம்பத்தில் பலத்தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் இன்று வரைக்கும் தனது கொள்கைப் பரப்புகளை கியூபா கெட்டிப்படுத்தியே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கியூபா, கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் உலகில் தலைசிறந்த நாடாகப் பார்க்கப்படுகிறது. கியூபா மீது எத்தனை பொருளாதரத் தடைகள் விதிக்கப்பட்டாலும் ஆப்பிரிக்க நாடுகளில் கொள்ளை நோய்கள் பரவி மக்களை அச்சுறுத்தும்போது கியூபா முதல் ஆளாக வந்து நின்றுவிடுகிறது. இந்த இடத்தில்தான் கம்யூனிசத்தின் மனிதநேய மாண்பு இருக்கிறது எனப் பலரும் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றனர். 

எனவே, 1960 களில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத்தடையை இன்றைக்கும் நீட்டிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என உலக நாடுகளின் மத்தியில் பேசப்பட்டு வந்தாலும் அதிக அதிகாரம் படைத்த ஒரு நாட்டை எதிர்த்து குரல்கொடுப்பதற்கு பல நாடுகளும் தயங்கியே வருகின்றன. இந்தப் பொருளாதாரத் தடையை நீக்குவதால் கியூபா பொருளாதார ஏற்றுமதியில் பெரிய முன்னேற்றத்தை அடைந்துவிடும் என்றுகூட சொல்லமுடியாது. ஏனெனில் ஐக்கியநாடுகளுக்கு ஏற்கனவே ரம் போன்ற மதுவகைகளை பல ஆண்டுகளுக்கு விற்பனை செய்வதாக கியூபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதார ஏற்றமதியைப் பற்றியெல்லாம் சிந்தித்துக்கூட பார்க்கமுடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. வர்த்தகத்தை தொடர முடியாவிட்டாலும், இருநாட்டு மக்களும் பயணம் செய்வதற்கு கூட 2014 வரை தடை இருந்துவந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. 

கியூபா மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்கவேண்டுமென்றால், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட சொத்துமதிப்புகளை திரும்ப செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா முந்தைய காலங்களில் நிபந்தனை விதித்து வந்தது. ஒருவேளை இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டால்  கியூபா கொடுக்க வேண்டிய சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வளவு பெரிய தொகையை ஒருபோதும் கியூபாவால் செலுத்த முடியாது என்பதையும் இந்த உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்தே வைத்திருக்கின்றன. 

1960, 1970 காலக்கட்டங்களில், வெறுமனே வர்த்தகப் போட்டியாக மட்டுமே இருந்த இந்த பொருளாதாரத் தடை தற்போது அரசியல் அழுத்தங்களோடு சேர்த்துக் கொண்டுவிட்டது. இதுவரை அமெரிக்கா, கியூபாவின்மீது 191 பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நட்பு நாடுகளும் தற்போது கியூபாவுடன் பொருளாதார வர்த்தகத்தைச் செய்யாமல் தவிர்த்துவருகின்றன. ஒருநாட்டிற்கு எதிராக அரசியல் கூட்டணியும் உருவாக்கப்படும் என்பதை கியூபாவின் வழியாகவே தற்போது இந்த உலகம் உணர்ந்துகொண்டிருக்கிறது. 

முன்னாள் அதிபர் ஒபாமா 2014 இல் கியூபாவுடன் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டதன் விளைவாக கியூப தலைநகரம் ஹவானாவில் அமெரிக்கத் தூதரம் அமைக்கப்பட்டது. மேலும், நட்புறவு ஒப்பந்தத்திலும் இருநாடுகளும் கையெழுத்திட்டு உள்ளன. ஆனால், அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் கியூபாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கியூபா எப்போதும் அமெரிக்காவுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறது. 

இதுவரை, தன்மீது போடப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை நீக்குவதற்கு கியூபா ஐ.நா சபையின் உதவியை பலமுறை நாடியிருக்கிறது. ஐ.நா. சபையில் 2018 இல் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமே கியூபா மீதுள்ள பொருளாதாரத் தடையை விலக்குவதற்கு மறுப்பு தெரிவித்தன. பின்பு 2019 நவம்பர் 19 இல் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் அமெரிக்கா, இஸ்ரேலுடன் பிரேசிலும் சேர்ந்து கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் 2019 இல் நடைபெற்ற ஐ.நா. சபை கருத்துக்கணிப்பில் கியூபா மீதான தடையை விலக்குவதற்கு உலகில் 183 நாடுகள் ஒப்புதல் அளித்தன என்பதும் முக்கிய அம்சமாகும். 

உலகிலேயே கியூபா மருத்துவத்துறையில் முதன்மையான நாடாக இருந்தாலும் ஒருபோதும் அந்நாடு மருந்துப்பொருட்களை வியாபாரமாகப் பார்ப்பதில்லை. கியூபாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக ரம், புகையிலை மட்டுமே இருக்கின்றன. 

சுற்றுலாத்துறையில் விலக்கு

மருத்துவத்திற்காக அமெரிக்கர்கள் ஐரோப்பிய நாடுகளின் வழியாக இன்றைக்கும் கியூபாவுக்கு சென்று வருகின்றனர். இந்தப் பயணத்தடையை நீக்கத்தான் ஒபாமா முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகக் குழுக்கள், கல்வி, ஆராய்ச்சி, பத்திரிக்கை, தொழில்துறை கூடங்களுக்கு எப்பொழுதும் தடை விதிக்கப்படுவது இல்லை.

மேலும்,  தடகள வீரர்கள், கலைஞர்கள் கியூபாவுக்கு சென்று வரலாம். ஆனால் மருத்துவத் தேவைகளுக்காக அமெரிக்கர்கள் நேரடியான பயணத்தை மேற்கொள்வதில் அமெரிக்கா கெடுபிடி காட்டி வருகிறது. ஒபாமாவுடன் ஒப்பந்தம் போடும்வரை அமெரிக்காவின் கப்பல்களை கீயூபா தனது பிராந்தியத்தில் நிறுத்த அனுமதிக்கவில்லை. ஆனால் வணிக விமானங்கள் அந்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதிபர் ட்ரம்ப்பின் அரசியல் சட்டவிதிகளின்படி தற்போது கியூபா மற்றும் அமெரிக்காவின் உறவுகளில் பெரும் பிளவுகள் ஏற்பட்டு வருகின்றன. 

கியூபாவில் தொழில் தொடங்க ஃபுளோரிடாவின் பல அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்தாலும் அதற்கு வழிவகை இல்லாமல் இருக்கிறது.  கியூபாவின் உட்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்வதற்கு பல தொழில் முதலீடுகள் மற்றும் நிபுணர்கள் தேவைப்படும் நிலையில் பொருளாதாரத் தடை விலக்கப்படுமா எனப் பலரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

பொருளாதாரத் தடையை விலக்கி கியூபா இயல்பான நிலைக்குத் திரும்புமா என்பதைக் குறித்து கடந்த 50 ஆண்டுகளாகப் பல பொருளாதார நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை பொருளாதார தடைகள் மிகவும் மெதுவான வேகத்தில் சரி செய்யப்பட்டாலும் அரசியல் நிலைமைகள் சரியாவதற்கு வாய்ப்பே இல்லை என ஒருபக்கம் ஏமாற்றமான பதிலையும் தெரிவிக்கின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.