ஏர் இந்திய விமானங்களுக்கு அமெரிக்காவில் தடை: புதிய சிக்கலில் மாட்டிக்கொண்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள்!!!

  • IndiaGlitz, [Tuesday,June 23 2020]

 

கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அடுக்கடுக்கான பிரச்சனையை சந்தித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அங்குள்ள இந்தியர்கள் அடித்துப் பிடித்து இந்தியா திரும்பி விடலாம் என நினைத்தனர். ஆனால் தயாகம் திரும்ப முடியாதபடி விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஆண்டைத் தாண்டி விசா நீடிக்கப்படாது என்ற அறிவிப்பு வெளியானபோது மாணவர்களின் வேலைவாய்ப்பு குறித்து பெரிய கேள்வியும் எழுப்பப் பட்டது. அடுத்து H-1B, H-2B விசாக்கள் வழங்குவதையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகளைச் சந்தித்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மேலும் ஒரு பலத்த அடியாக இன்னொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏர் இந்திய விமானம் முதற்கொண்டு அனைத்து இந்திய விமானங்களும் பாரபட்சமாக செயல்படுவதாக அமெரிக்காவின் போக்குவரத்துத் துறை குற்றம் சாட்டி விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறது. காரணம் ஏர் இந்தியா உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவரும்போது அவர்களிடம் கட்டணம் வசூலித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் போக்குவரத்துத் துறை இந்தியாவுடன் தொடர்புடைய அனைத்து விமானங்களையும் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதனால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைப்படி பேரிடர் நேரங்களில் இயக்கப்படும் விமானங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஆனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இயக்கப்படும் அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானம் முதற்கொண்டு அனைத்து விமான நிறுவனங்களும் பயணிகளுக்குக் கட்டணங்களை வசூலித்து வருகின்றன. இதனால் தற்போது பிரச்சனை வெடித்து இருக்கிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக பல மாதங்களுக்கு உலகின் பெரும்பலான நாடுகள் ஊரடங்கினை அறிவித்து இருந்தன. தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு விமான போக்கு வரத்து இயக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டண வசூலை காரணம் காட்டி அமெரிக்காவிற்கு விமான போக்குவரத்து தடை செய்யப் பட்டு இருக்கிறது. இதனால் இருநாட்டு விமான நிறுவனங்களுக்கும் பலத்த இழப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக சீனாவில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கும் அமெரிக்கப் போக்குவரத்து துறை தடை விதித்து இருந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவாத்தைக்குப் பின்னர் வாரத்திற்கு 4 விமானங்கள் மட்டுமே ஜுன் 15 ஆம் தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்திய விமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடை குறித்து வாஷிங்டனில் இருக்கும் இந்திய தூதர அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தடை இந்த மாதம் இறுதி வரை நீடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டவுடன் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் நம்பப்படுகிறது.