தடுப்பூசி போட்டா, மாஸ்க் தேவையில்லை..! எந்த நாட்டில் தெரியுமா..?
- IndiaGlitz, [Friday,May 14 2021]
கொரோனா தடுப்பூசியை இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவர்கள், மாஸ்க் போடத்தேவையில்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
கொரோனா 2 டோஸ்களை செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில், மாஸ்க் போட தேவையில்லை என அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தி வரும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவின் மக்கள் தொகையில் 46% பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டதால், வைரஸ் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. இதுவரை 15 கோடியே 40 லட்சம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார்கள். அதேபோல் 11 கோடியே 70 லட்சம் பேர் இரண்டாவது தவணை கோவிட் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்கள்.
இந்த நிலையில் தான் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், பொதுஇடங்களில் முகக்கவசம் அணியத்தேவையில்லை என்றும், 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
இருப்பினும் 2 டோஸ் செலுத்திக்கொண்டவர்கள், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான போக்குவரத்து, விமான நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் வீடுகள் அல்லாமல் தங்கும் பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் நோய்க்கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.
ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் நடைமுறையில் இருக்கும் உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசியை செலுத்தாதவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.