'புலிகேசி 2' படத்தில் நடிக்க முடியாது: வடிவேலுவின் பரபரப்பு கடிதம்
- IndiaGlitz, [Monday,April 16 2018]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தில் வடிவேலு நடிக்க மறுத்துவருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தயாரிப்பாளர் சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ள வடிவேலு, 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.
'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தில் நடிக்க தான் கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இந்த படம் 2016ஆம் ஆண்டு டிசம்பருக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும், அதுவரை வேறு படங்களில் நடிக்க வேண்டாம் என்ற நிபந்தனையையும் ஏற்றுக்கொண்டதாகவும் வடிவேலு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
ஆனால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்த படத்தின் படப்பிடிப்பே தொடங்காததால் தனது வந்த மற்ற படங்களின் வாய்ப்புகளை தான் இழந்ததாகவும், இதனால் தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டதாகவும் வடிவேலு கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், இந்த படத்தில் நடிகர் சங்கத்தலைவர் நாசரும் நடித்து வருவதால் அவர் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் வடிவேலு கூறியுள்ளார். இறுதியில் இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அப்படி கொடுத்தால் தற்போது தான் நடித்து வரும் மற்ற படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தனது விளக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்,.
இந்த நிலையில் வடிவேலு மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் வடிவேலு பதில் கடிதம் குறித்தும் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முடிவு செய்யப்படும் என் நடிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.