Download App

Vanthaa Rajavaathaan Varuven Review

'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைவிமர்சனம்
சிம்பு ரசிகர்களுக்கு மட்டும் ராஜா


சிம்பு-சுந்தர் சி கூட்டணியின் முதல் படம், தெலுங்கில் ஹிட்டான காமெடி மற்றும் செண்டிமெண்ட் கலந்த வெற்றிப்படத்தின் ரீமேக் என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் சிம்பு ரசிகர்களையும் பொதுவான ரசிகர்களையும் திருப்தி செய்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரரான நாசரின் மகள் ரம்யா கிருஷ்ணன், பிரபுவை காதலித்து திருமணம் செய்ததால் மகளை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். 20 வருடம் கழித்து தனது மகளை பார்க்க வேண்டும் என்ற ஆசைப்பட, நாசரின் பேரனான சிம்பு, தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற சென்னைக்கு வருகிறார். ரம்யா கிருஷ்ணனின் வீட்டில் டிரைவாராக வேலைக்கு சேர்ந்து அவருடைய இரண்டு மகள்களான கேதரின் தெரசா, மேகா ஆகாஷ் என இருவரையும் மாறி மாறி காதலித்து கொஞ்சம் கொஞ்சமாக அத்தையின் மனதை மாற்ற முயற்சிக்கின்றார். இதில் அவருக்கு ஏற்படும் பலவித பிரச்சனைகளை சமாளித்து அத்தை ரம்யாகிருஷ்ணனை தாத்தாவிடம் அழைத்து சென்றாரா? கேதரின், மேகா இருவரில் யாரை கரம்பிடித்தார்? என்பதுதான் மீதிக்கதை

சிம்புவின் நடிப்பில் ஆரம்பத்தில் இருந்த அதே அலட்டல், தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் பஞ்ச் டயலாக், ஸ்லோமோஷனில் அதிரடி சண்டை, வழக்கம்போல் அசத்தலான நடனம் என அவரது ரசிகர்களுக்காக மட்டும் படம் செய்துள்ளார். பொதுவான ஆடியன்ஸ்களை கவர வேண்டும் என்று அவர் முயற்சிக்கவே இல்லை. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் செண்டிமெண்ட்டுகளை பிழிந்துள்ளார். இனியாவது செக்க சிவந்த வானம்' போல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்யும் வகையில் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடிப்பார் என்று நம்புவோம்

கேதரின் தெரசா முதல் பாதியில் சிம்புவுடன் டூயட் பாடிவிட்டு பின் திடீரென தனது காதலர் மகத்துடன் செட்டில் ஆகிறார். தமிழ் சினிமாவின் 100 வருட ஃபார்முலாவின்படி மேகா ஆகாஷ் முதலில் ஹீரோவுடன் மோதி, பின் சமாதானம் ஆகி சிம்புவுடன் டூயட் பாடுகிறார். கேதரினை ஒப்பிடுகையில் இவருக்கு கொஞ்சம் பெரிய ரோல்தான்.

பிரபு, ராதாரவி, நாசர், சுமன் ஆகிய தெரிந்த முகங்கள் இருந்தும் மனதில் ஒட்டும் வகையில் நடிப்புக்கான காட்சி இல்லை. வழக்கம்போல் ரம்யா கிருஷ்ணன் ரோல் கெத்தாக உள்ளது. 

விடிவி கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோர்களின் காமெடி கொஞ்சம் கூட எடுபடவில்லை. இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் யோகிபாபு படத்தின் கலகலப்புக்கு காரணமாக இருக்கின்றார். குறிப்பாக அகலிகை நாடகக்காட்சியில் மாத்தி மாத்தி அடிவாங்கும் காட்சியில் காமெடி சூப்பர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையின் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை என்றாலும் அனைத்து பாடல்களின் லொகேஷன், செட்கள் சூப்பர். பின்னணி இசை கிளைமாக்ஸை தவிர படம் முழுவதும் ஒரே இரைச்சல். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் வெளிநாட்டு காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சி. 

குடும்பத்தில் இருந்து பிரிந்த ஒருவரை ஹீரோ சேர்த்து வைக்கும் கதை, தமிழிலேயே நூறு படங்களுக்கும் மேல் வந்துவிட்டது, ஏன், சுந்தர் சி அவர்களே இதுபோன்ற ஒருசில படங்களை இயக்கியுள்ளார். பின்னர் ஏன் இந்த கதையை தெலுங்கில் இருந்து ரீமேக் செய்தார்கள் என்று தெரியவில்லை. படத்தில் சுந்தர் சியின் பாணி பின்னுக்கு தள்ளப்பட்டு சிம்புவின் ஆதிக்கம் அதிகம் இருப்பது போல் தெரிகிறது. சுந்தர் சி படத்தில் இருக்கும் வழக்கமான விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள் இந்த படத்தில் மிஸ்ஸிங். 'கெத்துதான் என் சொத்து, எனக்கே ரெட் கார்டா, போன்ற வசனங்கள் சிம்புவுக்காகவே எழுதப்பட்டது போல் தெரிகிறது. 

மொத்தத்தில் யோகிபாபுவின் காமெடி காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம். சிம்பு ரசிகர்கள் முழு படத்தையும் ரசிக்கலாம்.

Rating : 2.5 / 5.0