பிரதமர் மோடிக்கு நடிகை வரலட்சுமி கேட்ட ஆவேசமான கேள்வி

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், ‘பெண்களின் கவுரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த தண்டனை மிக முக்கியமானது என்றும், நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும் நமது சக்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது என்றும் பெண்கள் வலுவூட்டலில் கவனம் செலுத்தும் ஒரு தேசத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், அங்கு சமத்துவம் மற்றும் வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரதமரின் இந்த கருத்து குறித்து நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில், ‘ஏழு வருடங்கள் கழித்து நீதி கிடைத்ததை நினைத்து நீங்கள் உண்மையில் பெருமைப்படுகிறீர்களா? இதுபோன்ற குற்றங்களுக்கு ஏன் ஆறு மாதங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றக்கூடாது? ஒரு பெண் தன்னுடைய உயிரையே இழந்ததற்கு நீதி கிடைக்க இத்தனை ஆண்டுகளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நிர்பயாவை, குற்றவாளிகள் ஏழு நிமிடத்தில் சிதைத்தனர். ஆனால் அவர்களுக்கு தண்டனை கிடைக்க ஏழு வருடங்கள் நாம் காத்திருக்கின்றோம். குறைந்தபட்சம் இப்போதாவது நீதி கிடைத்ததே’ என்று வரலட்சுமி இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.