சமூக இடைவெளி நிரந்தரமாகிவிடுமோ? பிரபல இயக்குனரின் அச்சம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சமூக இடைவெளி மனிதர்களிடையே நிரந்தரமாகிவிடுமோ என பிரபல இயக்குனர் விஜய் மில்டன் அச்சம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சமூக பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை, குடும்ப பாதுகாப்பு என்ற போர்வை நம்முள் இறங்கிவிட்டது. மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கி பூச்சிமருந்து தெளிப்பதையும் சொந்த ஊர்களுக்கு திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதானென்று நினைக்க ஆரம்பித்து விட்டோம் ஏற்கனவே கயிறு கட்டியவன் கட்டாதவன் ம..புடுங்கியவன் பிடுங்காதவன் என வட்டம்போட்டுக் கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக் கொண்டிருக்கிறோம்.
சகமனிதர்களை ஏன் நண்பர்களை கூட அவநம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டுவிட்டது நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என அச்சமாக இருக்கிறது. இந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக்கிடந்தால் அப்படியே விட்டுவிலகி ஒதுங்கிச்செல்வதுதான் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி என அவர்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது. இவ்வாறு இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.