'மாநகரம்' இந்தி ரீமேக்கில் மக்கள் செல்வன்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Friday,October 09 2020]

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’மாநகரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பதும், இந்த வெற்றியால் தான் அவருக்கு ’கைதி’ திரைப்பட வாய்ப்பு கிடைத்தது என்பதும் ‘கைதியின் வெற்றியால் ’மாஸ்டர்’ வாய்ப்பு கிடைத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ’மாநகரம்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதில் ஒரு முக்கிய கேரக்டரில் பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸே என்பவர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் ’மாஸ்டர்’ படத்தில் வில்லனாகவும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பழம்பெரும் நடிகர் சஞ்சய் மிஸ்ரா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’மாநகரம்’ திரைப்படம் முழுக்க முழுக்க சென்னையை அடிப்படையை வைத்து கதை உருவாக்கப்பட்டிருக்கும் என்பதால் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யும்போது மும்பை மாநகரத்துக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தின் டைட்டில் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.