புதுசா யாரு கதை சொல்றா, பழைய கதையின் உல்டாதான்: 'அனபெல் சேதுபதி' டிரைலர்

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

விஜய்சேதுபதி, டாப்ஸி நடித்த ’அனபெல் சேதுபதி’ என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த படம் செப்டம்பர் 17ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சுமார் இரண்டு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த டிரைலரில் பிரமாண்டமான அரண்மனை மற்றும் அதிலுள்ள அமானுஷ்ய காட்சிகள் அட்டகாசமாக உள்ளது.

இந்த படத்தில் யார் பேய்? யார் நிஜமான மனிதர்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் குறித்த கேரக்டரில் நடித்துள்ளனர். யோகிபாபு, ஊர்வசி, ராதிகா என ஒரு சிரிப்பு பட்டாளமே களமிறங்கி உள்ளது என்பதும் வழக்கம்போல் திரில் கதை அம்சத்துடன் கூடிய நகைச்சுவை பேய் படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பழம்பெரும் இயக்குநர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, டாப்சி, ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா, யோகிபாபு, கிஷோர், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, மதுமிதா, சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த டிரைலரின் இறுதியில் ‘புதுசா யாரும்மா கதை சொல்றா, பழைய கதையைத்தான் உல்டா பண்ணி பண்றாங்க, என்ன பண்றது’ என்ற யோகிபாபுவின் வசனம் படத்திற்கு மட்டுமின்றி திரையுலகிற்கும் பொருந்துவது போல் உள்ளது.