விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி!

  • IndiaGlitz, [Saturday,March 02 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் படம் என்றாலே அந்த படம் தொடங்குவதும் தெரியாது, முடிவதும் தெரியாது. ஒருசில படங்களில் அவர் ஒன்று அல்லது இரண்டு ஷெட்யூலில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவார். அந்த வகையில் 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த விஜய்சேதுபதி தற்போது 'சிந்துபாத்' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.

இந்த நிலையில் விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் 'வாலு', ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 4ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த படத்தில் சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். விவேக்-மெர்வின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் எம்.பிரபாகரன் கலை இயக்கத்தில் அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் பிரவீன்.கே.எல். படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது.