தமிழ்நாடு அரசு ஏன் வழக்கு தொடரவில்லை.. வக்பு சட்டம் குறித்து விஜய் அறிக்கை..


Send us your feedback to audioarticles@vaarta.com


மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும், ஆனால் ஏன் வழக்கு தொடரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம், இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது. இது இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் தலைமை நீதிபதி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ‘வக்ஃப் என்று ஏற்கெனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்ஃப் சொத்துக்கள் (waqf by user) மீது புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது’ என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
பின்னர் மேற்கொண்ட விசாரணையிலும் இந்த நிறுத்திவைப்பு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும்.
குறிப்பாக, நமது தமிழக வெற்றிக் கழகத்திற்காக வாதாடிய, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அரசியலமைப்பின் அடிப்படை விதிகளைக் கோடிட்டுக் காட்டியும், மதத் தனியுரிமைச் சட்டங்களில் இதுவரை நீதி அமைப்புகள் மேற்கொண்ட வரலாற்று நிலைப்பாடுகளை விளக்கியும் வாதிட்டார்.
மேலும், இந்தத் திருத்தச் சட்டத்தில் அரசியலமைப்புச் சட்டக் கூறுகள் 14, 15, 19, 25, 26 மற்றும் 29 போன்றவையும், இஸ்லாமியர்களின் மதத் தனியுரிமைச் சட்டங்களும் நேரடியாகக் கேள்விக்குள்ளாகின்றன என்பதை எடுத்துக் காட்டினார். எனவே, இந்த இடைக்கால நடவடிக்கையில் நமது தமிழக வெற்றிக் கழகம் முக்கியப் பங்காற்றியது என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக, வழக்கின் நிலைப்பாடு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனுதாரரின் பதிலுக்குப் பதிலுரையை (Rejoinder) நமது தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான வழக்கு விசாரணை, நாளை (மே 15) நடைபெற இருக்கிறது. அந்தப் பதிலுரையில் சிறுபான்மையின மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதமாகவும் உள்ள இந்தச் சட்டம், அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) மேல் கைவைக்கிறது என்ற அபாயத்தை முதன்மையாகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.
வக்ஃப் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருந்த போது, தமிழ்நாடு அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தற்போது புதிய வக்ஃப் சட்ட திருத்தம் இரு அவைகளிலும் நிறைவேறி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாகிவிட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன?இது தொடர்பாக தமிழக அரசு ஏன் இன்னமும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மக்களுக்கு முன்னுதாரணமான முதன்மை நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டாமா?
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும் இஸ்லாமியர் உரிமைகள்பறிபோவதைப் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்?
சிஏஏ சட்ட திருத்தத்துக்கு எதிராக கேரளா இடது முன்னணி அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது; மேலும் மாநில அரசுகளுக்கான உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அதுபோல், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலானத் தமிழ்நாடு அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு வாதங்களை முன்னிறுத்தி, தனியானதொரு சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்க வேண்டாமா? அதை ஏன் இன்னும் செய்யவில்லை? வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்திற்குக் கடந்து போவதாக இருக்காமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்திற்கான அறைகூவலாக இருக்க வேண்டும்.
சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, அதற்கு எதிராக உள்ள இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்களுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் போராடி வருகின்றன. அதைப்போன்று இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் தார்மீகக் கடமை! சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) May 14, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments