என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபேவின் குற்றப் பட்டியல்!!! ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள்!!!

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

 

போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 8 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியான விகாஸ் துபேவை பற்றித்தான் தற்போது இந்தியா முழுக்க பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. நேற்று காலை உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைன் என்ற பகுதியில் பதுங்கியிருந்த விகாஸ் துபே போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இன்று காலை போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றால் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்று பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து யார் இந்த விகாஸ் துபே, பிரபல ரவுடியாக வளர்ந்தது எப்படி போன்ற பல்வேறு தகவல்களை இண்டியன் எக்ஸ்பிரஸ் தொகுத்து வழங்கியிருக்கிறது.

கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு என்ற கிராமம்தான் விகாஸ் துபேவின் சொந்த ஊர். முதன்முதலில் 1990 ஆம் ஆண்டு தேஹாட்டி பகுதியில் உள்ள சிவ்லி காவல் நிலையத்தில் ஒருவரைத் தாக்கியதாக குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து சிவ்லி பகுதியில் தலித் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக விகாஸ் பெயர் அடிபட்டு இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் விகாஸ் விடுவிக்கப் பட்டு இருக்கிறார்.

1999 ஆம் ஆண்டு ஜுன்னா பாபா என்பவரைக் கொலை செய்துவிட்டு அவரது சொத்துகளை எல்லாம் அபகரித்துக் கொண்டார் என்றொரு வழக்கு அவர் மீது பதியப்பட்டு இருக்கிறது. பின்பு 2000 ஆம் ஆண்டில் விகாஸ் துபேவின் ஆசிரியர் மற்றும் தாரா சந்த் இண்டர் கல்லூரி என்றொரு பள்ளியின் ஓய்வுபெற்ற முதல்வரை விகாஸ் கொலை செய்ததாகக் குற்ற வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. சித்தேஷ் பாண்டே என்ற 65 வயது பள்ளி முதல்வரை கொலை செய்த குற்றத்திற்காக விகாஸ் துபேவுடன் 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கில் ஆயுள் தண்டனையும் வழஙகப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு குற்றவாளியே அப்போதே உயிரிழந்து இருக்கிறார். இரண்டு வருட சிறைக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்து இருக்கின்றார் துபே.

2001 ஆம் ஆண்டு ராஜ்நாத் சிங் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சந்தோஷ் சுக்லாவை கான்பூர் தேஹாட்டி பகுதியில் உள்ள சிவ்லி காவல் நிலையத்திற்கு அருகே ஓட ஓட விரட்டி ரவுடிகள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக விகாஸ் துபே பெயர் அடிப்பட்டது. 3 காவல் துறையினர் உள்ளிட்ட 8 பேர் மீது சுக்லா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. முதலில் உள்ளூர் நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கில் ஆதாரம் இல்லை என அனைத்துக் குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு மீண்டும் அலகாபாத் நீதிமன்றத்தில் ஆப்பீல் செய்யப்பட்டு 4 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தோஷ் சுக்லா கொலை வழக்குக்குப் பின்னரே விகாஸ் துபே பிரபல ரவுடியாக மாறியிருக்கிறார். மேலும் அரசியல் ஆதரவு பல வழிகளில் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து தனக்கு தொழில்முறை போட்டியாக இருந்த ஆத்யஷா லல்லன் பாஜ்பாவை 2002 இல் கொலை செய்ய முயன்றிருக்கிறார். அதில் தோல்வி ஏற்பட்டு கொலை முயற்சி வழக்கும் விகாஸ் துபே பெயரில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2000 இல் கேபிள் ஆப்ரேட்டர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் விகாஸ் துபே முக்கியக் குற்றவாளி என ஒரு வழக்கு சொல்கிறது.

2006 ஆம் ஆண்டில் விகாஸ் துபே வழங்கிய ஒரு பேட்டியில் தான் 10 ஆண்டிற்கும் மேலாக பிக்ரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்தேன் என பேட்டி அளித்து இருக்கிறார். பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் பின்னர் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். அவருடைய சகோதரர் முதலில் பீதி கிராமத்தில் போட்டியின்றி பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். சகோதரரின் மனைவி பஞ்சயாத்து உறுப்பினராக இருந்திருக்கிறார். பின்னர் பிக்ரு பகுதியின் பஞ்சாயத்து தலைவராக அவருடைய சகோதரர் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார்.

இவர் மீது உத்திரப்பிரதேச மாநில காவல் துறையில் 62 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன. 5 கொலை வழக்கு மற்றும் 8 கொலை முயற்சி வழக்குகளும் இருக்கின்றன. அந்த வழக்குகளில் சஹரன்பூர் மற்றும் லக்னோவில் தலா ஒரு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. மற்ற அனைத்து வழக்குகளும் கான்பூர் பகுதியை ஒட்டிய வழக்குகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கான்பூரில் தோஹட் பகுதியில் போதை மருந்து மற்றும் Psychotropic Substance Act க்கு கீழும் ஆயுதச் சட்ட வழக்கும் பதியப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வழக்கில் இருந்து விகாஸ் விடுவிக்கப் பட்டு இருக்கிறார்.

உத்திரபிரதேசத்தின் கேங்கஸ்டர் சட்டம், கூண்டா சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் கீழ் பல வருடங்களாகத் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளியாக விகாஸ் துபே இருந்து வருகிறார். கடந்த ஜுலை 2 ஆம் தேதி இரவு கான்பூரில் உள்ள பிக்ரு பகுதியில் விகாஸ் துபே பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதனால் தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட 8 போலீஸார் பிக்ரு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரவுடிகள் ஏ-47 துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக போலீஸாரை நோக்கிச் சுட்டதாகவும் அதில் 8 போலீஸாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த சம்பவத்தில் போலீஸாருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் ரவுடிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். 8 போலீஸாரை சராமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் விகாஸ் துபேவின் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இதையடுத்து நேற்று கான்பூரின் உஜ்ஜைன் பகுதியில் உள்ள காளி கோயிலில் விகாஸ் துபே பதுங்கியருந்ததாகத் தகவல் கிடைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும், கான்பூர், ஃபரிதார்த், ஹரியானா போன்ற இடங்களில் விகாஸ் துபே வுடன் தொடர்புடைய 4 ஆண் கூட்டாளிகள் மற்றும் 2 பெண்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு கான்பூர் காவல் நிலையத்தில் வைக்கப் பட்டு இருந்தனர். அந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்து ரன்வீர் என்ற ரவுடி தப்பிக்க முயன்றதாகவும் காவல் துறையினர் அவனை சுட்டு வீழ்த்தியதாகவும் செய்தி வெளியானது. அதேபோல கான்பூர் பகுதியில் பிரதாப் மிஸ்ரா என்ற ரவுடியை காவல் துறையினர் கைது செய்ய முயன்றபோது துப்பாக்கிச் சூட நடந்ததாகவும் அதில் பிரதாப் மிஸ்ரா சுட்டுக் கொல்லப் பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட விகாஸ் துபே இன்று காலை என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கிறார். கான்பூர் காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிக்க முயன்றதாகவும் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விகாஸ் துபே உயிரிழந்ததாகவும் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. 30 ஆண்டுகள் பிரபல ரவுடியாக வலம் வந்த விகாஸ் துபேவின் பல வழக்குகள் இன்றும் நிலுவையில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் சங்கிலியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப் படுகிறது.