Download App

Vikram Review

'விக்ரம்': வியக்க வைக்கும் படம்

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியான உடனே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக 'மாநகரம்' 'கைதி',  'மாஸ்டர்' என ஹாட்ரிக் வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் கமல்ஹாசனுடன் இணைந்த படம் என்பதால் எதிர்பார்ப்புக்கு அளவே இல்லாமல் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படக்குழுவினர் பூர்த்தி செய்திருக்கிறார்களா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்

ஆரம்பத்தில் 'பத்தல பத்தல' என்ற பாடலுக்கு செம ஆட்டம் போடும் கமல்ஹாசன் அடுத்த பத்து நிமிடங்களில் மர்மமான முகமூடி கும்பல் கும்பலால் கொடூரமாக கொல்லப்படுகிறார். அதற்கு முன்பே இரண்டு போலீஸ் அதிகாரிகளும் அதே மர்ம கும்பலால் கொல்லப்படுகின்றனர். இந்த சீரியல் கொலைகளை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக செய்கிறார்கள்? என்பதை கண்டுபிடிப்பதற்காக பகத்பாசிலின் அண்டர்கிரெளண்ட்  குழுவிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் தருகின்றனர். இந்த கொலைகளை துப்பறியும் போது இந்த கொலைகளுக்கு பின்னால் இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் இருப்பதாகவும், அதன் பின்னணியில் விஜய் சேதுபதி இருப்பதையும் பகத் பாசில் கண்டுபிடிக்கின்றார். அதுமட்டுமின்றி மேலும் சிலர் கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறார். ஆனால் காவல்துறை மற்றும் பகத் பாசில் கண்முன்னே அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. இந்த கொலைகள் எல்லாம் செய்தவர் யார்? என்பதை பகத்பாசில் குழு கண்டுபிடிப்பதோடு, ஒரு மாஸ் திருப்பத்துடன் இடைவேளை வருகிறது. அதன் பிறகு இரண்டாம் பாதியில் உள்ள கதையில் ஒரே ஒரு வரி சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் போய்விடும் என்பதால் இத்துடன் கதையை முடித்துக் கொள்வோம்

இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் கமல்ஹாசனாக இருந்தாலும் முதல் பாதியை முழுக்க முழுக்க பகத் பாசிலுக்கு விட்டுக் கொடுத்து விடுகிறார். முதல் பத்து நிமிடம், அதன் பிறகு ஆங்காங்கே சில பிளாஷ்பேக் காட்சிகளில் வருவதோடு சரி. ஆனால் இரண்டாம் பாதியில் விசுவரூபம் எடுக்கும் கமல், நடிப்பின் நாயகன் என்பதை பல காட்சிகளில் நிரூபித்து விடுகிறார். இத்தனை வருட கமல்ஹாசனின் படங்களில் இதுபோன்ற மாஸ் காட்சிகள் அவருக்கு இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான்

கமல்ஹாசனை அடுத்து நடிப்பில் ஸ்கோர் செய்பவர் பகத்பாசில் தான். முதல் பாதியில் அவர் சீரியல் கொலைகளை கண்டுபிடிக்கும் விதம், காயத்ரியிடம் காதல், குழுவினர்களுக்கு போடும் உத்தரவுகள், ஆகியவை பகத்பாசில் நடிப்புக்கு தீனிபோடும் சரியான காட்சிகள்.  இரண்டாம் பாதியில் அவரது பங்கு குறைவு என்றாலும் அவர் வரும் காட்சிகள் முக்கியமானது என்பதால் சுவராஸ்யமாக இருக்கிறது

'மாஸ்டர்' படத்தை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை வில்லனாக பார்க்க முடிகிறது. 'மாஸ்டர்' படத்தின் பாணியிலேயே அவரது நடிப்பு இந்த படத்திலும் இருந்தாலும், கமலுடன் நேருக்குக் நேர் மோதும் போது ஸ்கோர் செய்கிறார்.

'விக்ரம்' படம் கமல்ஹாசன் படமா? அல்லது லோகேஷ் கனகராஜ் படமா என்று  கேட்டால் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் லோகேஷ் கனகராஜ் படம்தான் என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு ஆரம்பம் முதல் இறுதிவரை நேர்த்தியான திரைக்கதை. ஒரு ஆக்சன் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று மற்ற இயக்குனர்கள் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம். ஒரு காட்சியில் குறிப்பாக இரண்டாம் பாதியில் படம் போனதே தெரியாத அளவுக்கு செம விறுவிறுப்பு. கல்யாண காட்சியின் கால்மணி நேரம் இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் பார்த்ததில்லை. அதுமட்டுமின்றி முதல் பாதியில் சாதாரண கேரக்டர்களாக அறிமுகமானவர்கள் இரண்டாம் பாதியில் திடீரென மாஸ் கேரக்டர்களாகிவிடுவது யாருமே எதிர்பார்க்காதது. விஜய்சேதுபதியின் மூன்று மனைவிகளாக வரும் மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி நாராயணன் ஆகியோர்கள் படத்தின் திருஷ்டி. லோகேஷ் இதனை தவிர்த்திருக்கலாம்.

அனிருத்தை இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருமே சேர்ந்து செம வேலை வாங்கி உள்ளார்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை அவரது பின்னணி இசை செம சூப்பர். பாடல்களிலும் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டில் எடுக்கப்பட்டதால், அதற்கான லைட்டிங் செட்டப்பிற்கு ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் கடுமையாக உழைத்திருக்கிறார். அதேபோல் படத்தின் எடிட்டிங் வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.

ஒரு சில குறைகள் இருந்தாலும் ஒரு முழுநீள ஆக்ஷன் படத்தை பார்த்த திருப்தி படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது இருக்கிறது. ஐந்தே நிமிடங்கள் வந்தாலும் சூர்யாவின் மாஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு போனஸ். இந்த படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யாவின் கேரக்டர் என்ன என்பதை லோகேஷ் சொல்லிவிட்டதால் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருப்பது உறுதி.

மொத்தத்தில் விக்ரம், வியக்க வைக்கும் மாஸ் ஆக்சன் படம்.

Rating : 3.5 / 5.0