காருக்குள் தலையை நுழைத்து இருமிய கிராம மக்கள்: பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனா பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்களின் காருக்குள் தலையை விட்டு வேண்டும் என்றே இருமி, கொரோனாவை பரப்ப முயன்ற கிராம மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள பூன்துரா என்ற கிராமத்தில் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக அரசுக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவின் உத்தரவின்பேரில் அக்கிராமத்திற்கு மருத்துவர் குழு ஒன்று காரில் சென்றது. இந்த நிலையில் காரை வழிமறித்த கிராம மக்கள் தங்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும், யாருக்கும் இங்கு கொரோனா இல்லை என்றும் தாங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தால் மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிப்பதில்லை என்றும் விரட்டியடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்கள். ஆனால் மருத்துவர்கள் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளித்தபோது இந்த கிராமத்தில் இருந்து வரும் நோயாளிகள் யாரும் மாஸ்க் அணிந்து வரவில்லை என்பதால் வெளியிடப்பட்டதாக கூறினர்.

இந்த நிலையில் தங்கள் கிராமத்திற்குள் பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்களின் காரில் உள்ள கண்ணாடியை வலுக்கட்டாயமாக இறக்கி உள்ளே தலையை நுழைத்து இருமி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கிராம மக்களின் இந்த அடாவடி செயலால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறிய போது ’மருத்துவர்கள் சென்ற காரின் கண்ணாடியை வலுக்கட்டாயமாக இறக்கி இருமிய கிராம மக்களின் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதை எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் மருத்துவர்களை கடவுளாக மக்கள் பார்த்து வரும் நிலையில் ஒரு சிலர் இம்மாதிரி தகாத செயலைச் செய்வதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.