சர்ச்சை ஏற்படுத்த வேண்டுமென்றால் முன்கூட்டியே கூறிவிடுங்கள்: நிருபருக்கு விராத் பதிலடி

டி20 கிரிக்கெட் போட்டியின் ஓபனராக ரோகித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷானை நீங்கள் களமிறக்க முயற்சி செய்வீர்களா என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, விராத் கோஹ்லி கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை விராட் கோலி சந்தித்தார்.

அப்போது தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, இஷான் கிஷானை களமிறக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர். அது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, ‘நீங்கள் புரிந்து தான் பேசுகிறீர்களா? என்று தெரியவில்லை. டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மாவை நீக்குவதா? பயிற்சி ஆட்டத்தில் அவர் எப்படி விளையாடினார் என்பது ஞாபகம் இருக்கிறதா? உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றினால் முன்கூட்டியே என்னிடம் கூறிவிடுங்கள். நான் அதற்கேற்ப பதில் தருகிறேன்’ என தெரிவித்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை டி20 தொடருடன் விராத் கோலி கேப்டன் பதவியிலிருந்து வெளியேற உள்ள நிலையில் அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவரை நீக்க வேண்டும் என நிருபர் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.