விராத் கோஹ்லி-அனுஷ்கா திருமணம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 12 2017]

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லி கடந்த சில வருடங்களாக பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இவர்களுடைய திருமணம் டிசம்பரில் நடைபெறும் என்று கூறப்பட்டது. அதற்காகவே விராத் கோஹ்லி, இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையே நடந்து வரும் ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விலகினார்

இந்த நிலையில் நேற்று இத்தாலி நாட்டில் அழகிய மிலன் நகரில் விராத்கோஹ்லி-அனுஷ்கா சர்மாவின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. இந்த திருமணம் நடைபெற்றதை விராத்கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மா தங்களது டுவிட்டரில் உறுதி செய்தது மட்டுமின்றி திருமண புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளனர்

விராத் கோஹ்லி தனது டுவிட்டரில், 'வாழ்நாள் முழுதும் அன்பின் பிணைப்பில் இணைய இன்று இருவரும் உறுதிமொழி பூண்டோம். உங்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். இந்த அழகிய நாள் எங்கள் குடும்பத்தினர், ரசிகர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருடன் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. எங்கள் பயணத்தின் முக்கிய அங்கம் வகிப்பதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டிசம்பர் 21ஆம் தேதி டெல்லியில் உறவினர்களுக்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், டிசம்பர் 26ஆம் தேதி கிரிக்கெட் பிரபலங்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி மும்பையிலும் நடைபெறும் என்று விராத் கோஹ்லி தரப்பினர் அறிவித்துள்ளனர்.