close
Choose your channels

Vivegam Review

Review by IndiaGlitz [ Thursday, August 24, 2017 • தமிழ் ]
Vivegam Review
Banner:
Sathyajyothi Films
Cast:
Ajith Kumar, Vivek Oberoi, Kajal Aggarwal, Akshara Haasan, Thambi Ramaiah, Karunakaran, Appukutty, Rajendran, John Little
Direction:
Siva
Production:
T. G. Thiyagarajan, SndhilThiyagarajan, T. Arjun
Music:
Anirudh Ravichander

'வீரம்', 'வேதாளம்' என்ற இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் குமாரும் இயக்குனர் சிவாவும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘விவேகம்’. முந்தைய இரண்டு படங்களை விட இந்தப் படம் பட்ஜெட், மேக்கிங், எதிர்பார்ப்புகள் என  பல விதங்களில் பெரியது. படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

சர்வதேச தீவிரவாத ஒழிப்புப் பிரிவு ஒன்றின் தலைமை அதிகாரி அஜய் குமார் என்கிற ஏ.கே (அஜித்) ஒரு செயற்கையாக நிலநடுக்கங்களை உருவாக்கி மக்களை அழிக்கும் சர்வதேச சதியை முறியடிக்கும் பொறுப்பை ஏற்கிறான். அதில் இருக்கும் சவால்களை சந்தித்து தன் உயிரைப் பணயம் வைத்து தன் காதல் மனைவியையும் (காஜல் அகர்வால்) பாதுகாத்து எப்படி வெல்கிறான் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.  இதற்கு மேல் கதையை விவரிப்பது படத்தில் உள்ள சில ட்விஸ்ட்களைக் கெடுக்கும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.

முதலில் இது வெறும் மாஸ் ஹீரோ படம் அல்ல. தயாரிப்பு தரப்பும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் உறுதியளித்தது போல் சர்வதேசத் தரத்தில் உருவாக்கபப்ட்டிருக்கிறது ‘விவேகம்’.
 அதற்காகவே படக்குழுவை பாராட்ட வேண்டும். இந்த விஷயத்தில் முதன்மையான பாராட்டைப் பெற வேண்டியது தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ். படத்தின் கதைக்குத் தேவையான செலவைச் செய்து படத்தை எடுத்திருக்கின்றனர். இதன் மூலம் கதையின் சர்வதேசத்தன்மைக்கு ஏற்ப படத்தையும் சர்வதேசத் தரத்தில் கொண்டுவந்து சத்ய ஜோதி நிறுவனத்தின் நற்பெயரைக் காப்பாற்றிவிட்டனர். ஒளிப்பதிவாளர் வெற்றியின் விஷுவல்கள் மற்றும் மிலனின் கலை இயக்குமும் இந்த விஷயத்தில் தக்கதுணைபுரிந்திருக்கின்றன.

இயக்குனர் சிவா கதையில் பல சர்வதேச அரசியல் விஷயங்களையும் உயர் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியிருக்கிறார். எனவே படத்தை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால்தான் இவற்றைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த விஷயங்களை கதை-திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கும் விதம் திருப்தியளிக்கவில்லை. ‘ஸிக்ரெட் சொசைட்டு’, பல நாடுகளுக்கு இடையிலான மறைமுக போர் உள்ளிட்ட விஷயங்களை மிக எளிமைப்படுத்திக் கையாண்டிருப்பது ஏமாற்றமளிப்பதோடு இதுபோன்ற விஷயங்களில் பரிச்சயமுள்ள ரசிகர்களுக்கு இவை கேலிக்குரியவையாக இருக்கும் வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் விடக் கொடுமை பல நாடுகளுக்கிடையில் நடக்கும் போர் இந்தப் படத்தில் வெறும நாயகன் மற்றும் வில்லனுக்கிடையில் நடக்கும் ஒற்றைக்கு ஒற்றை யுத்தமாக சுருக்கப்பட்டிருப்பதுதான். படத்தில் வரும் பல ட்விஸ்ட்களும் பெரிய அளவில் சுவாரஸ்யத்தைத் தரவில்லை.

இத்தகு குறைகள் ஒருபுறம் இருந்தாலும் அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தத் தேவையான மாஸ் காட்சிகள்,  ஆக்‌ஷன் ரசிகர்கலுக்கான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள், கணவன் - மனைவி இடையிலான எமோஷனல் காட்சிக்ள் ஆகியவற்றுக்கு குறையில்லாத திரைக்கதையை அமைத்திருப்பதற்கு சிவாவைப் பாராட்டலாம். படம் அஜித் ரசிகர்களையும் ஆக்‌ஷன் பட ரசிகர்களையும் திருப்திபடுத்தத் தவறாது. 

ஒரு சர்வதேச உளவாளி வேடத்தில் அஜித் கச்சிதமாகப் பொருந்துகிறார். அதற்காக அவர் தன் உடல்வாகை மாற்றியிருப்பதில் அவரது கடின உழைப்பு பளிச்சிடுகிறது. சண்டைக் காட்சிகளில் வழக்கத்தைவிட அதிகமான ரிஸ்குகள் எடுத்து கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்திருக்கிறார். ஆனால் நடிப்புக்கு பெரிய சவால் இல்லை. ஏ.கே. பாத்திரமே அஜித்தின் நிஜ வாழ்க்கை பிம்பத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது.  அவர் பேசும் பெரும்பாலான வசனங்களூம் அப்படியே இருக்கின்றன. எதிர்பார்த்ததுபோல் இது அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தினாலும் பொதுவான ரசிகர்கள் இவற்றை எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்பதும் பெரும் கேள்வி.

காஜல் அகர்வால் பார்ப்பதற்கு வெகு லட்சணமாக இருக்கிறார். கதையில் அவரது பாத்திரத்துக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஆனால் வீணை வாசித்து, பாட்டுப்பாடும் அடக்க ஒடுக்கமான, அன்பான மனைவி என்ற வழக்கமான கதநாயகி பாத்திரம்தான். விவேக் ஓபராய் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.  அவருக்கான டப்பிங் பொருத்தத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செல்த்தியிருக்கலாம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்‌ஷரா ஹாசனின் பாத்திரம் ஒரு கெளரவத் தோற்றத்துக்கு இணையாக சுருக்கப்பட்டிருப்பது ஏமாற்றம். கருணாகரன் முதல் பாதியில் கொஞ்சம் கலகலப்பு சேர்க்கிறார்.

அநிருத் இசையில் ஏற்கனவே வெற்றிபெற்ற பாடல்கள் நன்கு படமாக்கப்பட்டு சரியான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ’தலைவிடுதலை’ பாடல் வரும் இடமும் அது படமாக்கப்பட்ட விதமும் ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்யும். பின்னணி இசையையும் சிறப்பாக் செய்திருக்கிறார். கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் மட்டும் இரைச்சல் அதிகம். வெற்றியின் ஒளிப்பதிவும் மிலனின் கலை இயக்கமும் படத்தின் சர்வதேசத் தரத்துக்கு நன்கு துணைபுரிந்திருக்கின்றன. சண்டைக் காட்சிகளின் வடிவவைப்பு படத்துக்கு மிகப் பெரிய பலம்.

மொத்தத்தில் 'விவேகம்' படத்தை அஜித்துக்காகவும் சிறப்பான சண்டைக் காட்சிகளுக்காகவும் மேக்கிங்கில் உள்ள சர்வதேச தரத்துக்காகவும் பார்க்கலாம்.

Rating: 2.75 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE