தினகரன் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்!

தேர்தல் காலத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது, சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து வெளியேறுவது, கட்சியே குறிப்பிட்ட நபர்களை நீக்குவது என்பதெல்லாம் இந்திய அரசியலில் சர்வ சாதாரணம். அந்த வகையில் சமீபத்தில் தினகரனின் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி உள்பட ஒருசில பிரமுகர்கள் வெளியேறி மாற்று கட்சியில் இணைந்த நிலையில் தற்போது அக்கட்சியின் இன்னொரு முக்கிய பிரமுகராக இருந்த விபி கலைராஜனை தினகரன் அதிரடியாக நீக்கியுள்ளார்.

அமமுக கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த விபி கலைராஜன் திமுகவில் இணையவுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில் தினகரன் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். இன்று முதல் விபி கலைராஜன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்றும் தினகரன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று திருச்சியில் விபி கலைராஜன் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.