செம்பரபாக்கம் ஏரியின் நீர்மட்டம்!!!
சென்னையில் நேற்று முதல் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக செம்பரபாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். நிவர் புயல் ஏற்படுத்தி தாக்கத்தால் மேலும் அப்பகுதியில் கனமழை அதிகரிக்கும் எனக் கருதப்படும் நிலையில் செம்பரபாக்கம் ஏரி முழுவதும் நிரம்பி வழிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
செம்பரபாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக ஏரியின் நீர்மட்டம் தற்போது 22 அடியை விரைவில் எட்டவுள்ளது.
இந்நிலையில் அந்த ஏரியின் நீர்மட்டம் குறித்து பொதுப்பணித் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் எனவும் செம்பரபாக்கம் ஏரியின் நீர்மட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முன்னதாக செம்பரபாக்கம் ஏரியில் அறிவிப்பின்றி திறந்து விடப்பட்ட நீரினால் ஒட்டுமொத்த சென்னை மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால் செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மக்கள் மத்தியில் எப்போதும் ஒருவித பீதியை ஏற்படுத்தியே வருகிறது.