கொரோனா பரவலைத் தடுக்க சீனா எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன???

  • IndiaGlitz, [Tuesday,April 07 2020]

 

கொரோனா ஊரடங்கினால் சீனா அதிகாரிகள் பலரை நேரடியாக தொடர்பு கொள்ளமுடியாத நிலைமை இருந்துவந்தது. தற்போது சீனாவில் இயல்பு நிலைமை திரும்பியிருப்பதால் பல உயர்மட்ட அதிகாரிகள், சீனாவில் கொரோனா பாதிப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுவருகின்றனர். சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ஜெனரல் ஜார்ஜ் காவோ சீனா எடுத்த நடவடிக்கைகள் குறித்து தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவர் சார்ஸ் வைரஸ் பரவிய காலங்களில் வைரஸ் சவ்வுகள் எப்படி மனித செல்களில் நுழைகின்றன என்பதைக் குறித்து ஆய்வு செய்த குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவிடம் இருந்து மற்றநாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்

சமூகத் தொற்று என்பது நோய்த்தொற்றுகளை பரவவிடாமல் தடுக்க எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கை. குறிப்பாக கொரோனா சுவாச உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் நீர்த்துளிகளில் இருந்து பரவும் என்பதால் அத்தகைய நிலைமையைத் தவிர்ப்பதற்கு பாதுகாப்புகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம். தடுப்பு மருந்துகளோ, நோய்க்கிருமிகளுக்கு மருந்துகளோ எதுவும் இல்லாத நேரத்தில் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய அம்சம் தனிமைப்படுத்தல் மட்டுமே எனக் குறிபிடுகிறார் காவோ.

1. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவது

2. நோய்த்தொற்று இருப்பவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவது.

3. மேற்கண்ட விவரங்களை முக்கியமாக உறுதிப்படுத்துவது. இவர்களுக்குத்தான் நோய்த்தொற்று இருக்கிறது என்பதையும், இவர்களுடன் தொடர்புடைய அனைத்துநபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்ற விவரத்தையும் முழுமையாக உறுதிப்படுத்திக்கொள்வதே செய்யவேண்டிய முதல் வேலையாகும். இதற்காக நாங்கள் மெனக்கெட்டு வேலைப்பார்த்தோம் என்று தெரிவித்தார் காவோ.

4. பொதுக்கூட்டங்கள், நகரத்தின் இயக்கத்தை முழுவதுமாக தடைசெய்தோம். நோய்த்தொற்று இருக்கும் பகுதிகள் முழுமையாக தடைச்செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதும் அவசியம். இதற்கு செய்யவேண்டியது Lockdown மட்டுமே. பிரெஞ்சு மொழியில் Cordon Sanitaire எனவும் இதைக் குறிப்பிடுவார்கள் என காவோ தெரிவித்தார்.

சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஊரடங்கு ஜனவரி முதலே இருந்தது. மார்ச் 23 அன்று வுஹான் மாகாணத்தில் தொடங்கி மற்ற நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக மேற்பார்வை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுதான் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய அம்சம் எனவும் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேற்பார்வையாளர்களை நியமிப்பதில் அரசு அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகளின் மத்தியில் ஒருமித்த கருத்துகள் இருக்க வேண்டும். தேசிய அளவில் வலுவான தலைவர்களை அரசாங்கம் நியமிக்க வேண்டும். மேலும், உள்ளூர் களங்களில் வேலைப்பார்க்கும்போது மக்களுடன் நெருக்கமான தலைவர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். மக்களுடன் நெருங்கிய நிலைமைகளில் இருப்பவர்களால் மட்டுமே நோய்த்தொற்றை எளிமையாகக் கண்டுபிடிக்க முடியும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்த மிகப்பெரிய தவறு, அந்நாட்டில் முறையான முகக்கவசம் அணியும் பழக்கத்தை மேற்கொள்ளாதது எனவும் ஜெனரல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள முகமூடிகள் அணிவது கட்டாயம் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், அந்நாட்டு மக்கள் முகக்கவசம் அணியாமல் தவிர்த்துவருகின்றனர். அந்நாடுகளில் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளார். இக்கருத்தை பல மருத்துவ விஞ்ஞானிகளும் ஆமோதித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற கட்டுப்பாடுகள்- கடைகள், கட்டிடங்கள் மற்றும் பொதுபோக்குவரத்து நிலையங்கள், நாட்டின் நுழைவாயில்கள் போன்ற இடங்கள் முழுவதும் தடை செய்யப்பட்டு, மேலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய இடங்களில் முறையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சீனாவில் தெருவுக்கு தெரு தெர்மாமீட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் உடல் வெப்பநிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். பல கட்டஆய்வுகளிலும் இந்த வைரஸ் பொருட்களின் மேற்பரப்புகளில் அதிக நேரம் தொடர்ந்து வாழக்கூடியது எனத் தெரியவந்துள்ளது. எனவே இந்த நோய்த்தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள மக்களுக்கு முறையான விழிப்புணர்வுகளை கொடுக்க வேண்டும்.

சீனாவில் நோய் அறிகுறிகள் இருப்பவர்களையும், லேசான நோய் மட்டுமே இருந்தவர்களையும் கடுமையான பாதுகாப்புகளில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களை குடும்ப உறுப்பினர்கள் முதற்கொண்டு எவரும் நெருங்கமுடியாத அளவிற்கு தனிமையில் பாதுகாக்கப்பட்டனர். இந்த முறையை மற்ற நாடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் காவோ குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு முதலில் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க வேண்டும். சிகிச்சைக்காகவும் மக்கள் வெளியே நடமாடக்கூடாது. எனவே சீனா முழுவதும் பல இடங்களில் புதிதாக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. பல விளையாட்டு அரங்கங்கள் முதற்கொண்டு, பல கட்டிங்கள் புதிய மருத்துவமனைகளாக உருவாக்கப்பட்டன. தனிமைப்படுத்தலுக்கு வீடு சரியான இடம் அல்ல. வீட்டில் தொடர்புடையவர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றாலும் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் தனிமைப்படுத்தப்படுவது அவசியம்.

சீனாவில் நோய்த்தோற்றம் குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்படுகிறது. நவம்பர் 17 அன்றே கொரோனா நோய்த்தொற்று சீனாவில் இருந்தது என்று சீன மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டது. ஆனால் நவம்பர் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்று இருந்ததற்காக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி உணவு இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா பரவியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன எனவும் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். மேலும், வைரஸ் தொற்றை குறித்து சீன அரசாங்கம் உடனடியாகத் தெரிவிக்க வில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 8 ஆம் தேதி அமெரிக்கா பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் கொரோனா வைரஸ் பற்றிய கதை என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. இது விஞ்ஞானிகளின் கருத்தாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனவரி 5 ஆம் தேதியே சீனாவின் தரவுத்தளம் புதிய வைரஸ் பற்றிய கருத்துக்களை பொதுவெளியில் கூறியிருக்கிறது. WHO வும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருந்தது. சீனாவின் தகவலை அடுத்து அமெரிக்க பத்திரிக்கை 3 நாட்களுக்குப் பிறகே கட்டுரையை வெளியிட்டது. பொதுவெளியில் பகிங்கரமாக சொல்லவில்லை எனக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நாங்கள் விஞ்ஞானிகளின் உதவியை நாட வேண்டியிருந்தது. காரணம் பொதுவெளியில் ஒரு புதிய வைரஸ் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் மக்கள் பீதியடைய வாய்ப்பிருக்கிறது. எனவே சிறிய தாமதத்திற்குப்பிறகு முறையான விஞ்ஞானிகளின் உதவியுடன் இந்த அறிவிப்பை நாங்கள் வெளியிட்டோம் எனவும் ஜெனரல் தெரிவித்து இருக்கிறார்.

மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவும் என்ற தகவலை சீன அரசு வெளியிடுவதற்கு அதிக நாட்களை எடுத்துக்கொண்டதாகவும் விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால் சீன ஆய்வாளர்கள் ஆரம்பம் முதலே கடுமையான போராட்டங்களை கொரோனா வைரஸ்க்கு எதிராக எடுத்துவந்தனர் என ஜெனரல் தெரிவித்துள்ளார்.

தற்போது, சீனாவில் உள்ளூர் நபர்களிடம் கொரோனா நோய்த்தொற்று முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு பயணிகள் 32 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சீன மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜெனரல் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதைக் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார். நோய்த் தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது. இந்த மருந்து, ஏப்ரல் மாதத்தில் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. ACE2 கொண்ட வைரஸிற்கான ஏற்பியாக குரங்கு மற்றும் டிரான்ஸ்ஜெனிக் எலிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

சீன வைரஸ் என விமர்சிக்கப்படுவது பற்றி, ஜெனரல் இந்த வைரஸ் பூமிக்கு சொந்தமானது. கொரோனா வைரஸை நாங்கள் பொதுவான எதிரி என்றே கருதுகிறோம். எந்தவொரு நபரின் அல்லது நாட்டின் எதிரி அல்ல எனவும் தெரிவித்து இருக்கிறார்.