அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பின் உள்ள தற்கொலை வழக்கு என்ன? பரபரப்பு தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,November 04 2020]

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் எந்த வழக்குக்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன

கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த அன்வே நாயக் என்ற பொறியாளர், அர்னாப் கோஸ்வாமியின் சேனலுக்கு ஸ்டூடியோ ஒன்றை கட்டிக் கொடுத்தார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி திடீரென அன்வே நாயக் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதே வீட்டில் அவரது தாயாரும் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அன்வே நாயகி எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் தனது மரணத்திற்கு அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் என்றும் அவருடைய சேனலுக்கு ஸ்டுடியொ கட்டிக் கொடுத்த விவகாரத்தில் தனக்கு அவர் 5.4 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தவில்லை என்றும் அதனால் தனக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்

இந்த நிலையில் அன்வே நாயக் மரணம் அடைந்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து அன்வே நாயக்கின் மனைவி அக்ஷிதா என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இந்த வீடியோ பயங்கர வைரலானதை அடுத்து மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தை கவனிக்கும்படி மாநில சிஐடி அமைப்பிடம் தெரிவித்தார்

இதுகுறித்து மாநில சிஐடி போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கில்தான் தற்போது அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அர்னாப் கோஸ்வாமி தரப்பினரோ, இந்த வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும் முடிந்துவிட்ட வழக்கை வேண்டுமென்றே தூசி தட்டி எழுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்