close
Choose your channels

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி!!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!!

Thursday, August 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி!!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!!

 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகத்திலேயே முதல்முறையாக ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 12 இல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிப்பு வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் செய்தியாளர்களின் மத்தியில் தோன்றி ரஷ்ய விஞ்ஞானிகள் தயாரித்த கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக்-5 தற்போது மருந்து பதிவுக்கான நடைமுறைகளை முடித்துக் கொண்டு பயன்பாட்டுக்கு தயாராகி இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் ரஷ்யா விஞ்ஞானிகள் தயாரித்த கொரோனா தடுப்பூசி எனது மகளுக்கும் கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது என அறிவித்து இருந்தார். இதனால் உலகம் முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

காரணம் கொரோனா மட்டுமல்ல பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி தயாரிக்கும்போது முறையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி மீது மேற்கொள்ளப்பட்ட எந்த பரிசோதனை விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது விஞ்ஞானிகளின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் செல்லுலார் மற்றும் மாலிக்குலர் பயலாஜி துறையின் இயக்குநர் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். “ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என ரஷ்ய அதிபர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் பரிசோதனை விவரங்கள் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. இந்த மருந்து இந்திய மக்களின்மீது தற்போது சோதனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை மருந்து நல்லமுறையில் வேலைசெய்தால் இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான். ஆனால் தடுப்பூசி தயாரிப்பு, அதன் பாதுகாப்பு, பரிசோதனை குறித்த எந்த புள்ளி விவரங்களையும் ரஷ்யா வெளிவிடாதது கடும் சந்தேகத்தை எழுப்புகிறது” எனத் தெரிவித்து இருந்தார்.

கொரோனாவிற்கு இறுதிகட்ட தீர்வு தடுப்பூசி மட்டுமே என உலக விஞ்ஞானிகள் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இதுவரை 165 கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பரிசோதனையில் இருப்பதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்து இருக்கிறது. அதில் ஆஸ்க்ஃபோர்டு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உட்பட 6 கொரோனா தடுப்பூசிகள் மனிதர்களின் மீதான 3 ஆம் கட்ட கிளினிக்கல் சோதனையை மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் கமலயோ தேசிய நிறுவனம் மற்றும் நுண்ணியியல் ஆய்வு மையம் இரண்டும் இணைந்து ஸ்புட்னி-5 என்ற தடுப்பூசியை தயாரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் உலகம் முழுவதும் உள்ள 20 நாடுகளுடன் 100 கோடி தடுப்பூசி தயாரிப்புகளுக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் கூறும்போது, ஸ்புட்னிக்-5 பாதுகாப்பானது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அமெரிக்காவின் சுகாதார மந்திரி அலெக்ஸ் அசஸ் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி உருவாக்க முறை குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்பட வில்லை. கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் யார் முதல் என்பது மட்டுமே போட்டியாக இருக்கக்கூடாது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதோடு உலகச்சுகாதர நிறுவனம் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து முதலில் எச்சரிககை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. தற்போது ரஷ்ய கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் மதிப்பீடு செய்ய ஆர்வமாக இருக்கிறோம் என அறிவித்து இருக்கிறது. இதைத்தவிர சில விஞ்ஞானிகளும் ரஷ்ய தடுப்பூசி குறித்து எச்சரிக்கை வெளியிட்டு வருகின்றனர். அவசர அவசரமாக கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கொண்டு வந்திருக்கிறது. பரிசோதனை விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. பாதுகாப்பு தன்மை குறித்து உத்தரவாதம் கொடுக்கப் படவில்லை என அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி வருகின்றன.

இந்தக் குற்றசாட்டுகளுக்கு ரஷ்யாவின் சுகாதார மந்திரி “ரஷ்ய தடுப்பூசிக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனங்கள் அடிப்படை அற்றவை. வெளிநாட்டு சகாக்கள், போட்டியாக பார்க்கிறார்கள் என்றே நம்புகிறேன். எனவே தான் அவர்கள் எதிரான கருத்துகளை கூற முயற்சிக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை ஆதாரம் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். ரஷ்ய தடுப்பூசியின் பின்னால் நிச்சயமாக சில மருத்துவ அறிவு மற்றும் தரவுகள் உள்ளன’‘ எனப் பதில் அளித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.