கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே திருடிய மனைவி கைது!

கணவருக்கு தூக்க மருந்து கலந்த கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 பவுன் நகை திருடிய மனைவியால் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் என்ற பகுதியை சேர்ந்த வின்சென்ட் என்பவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரும் இவர் மனைவி ஜான்சிராணியும் தூத்துகுடியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மனைவிக்கு வின்சென்ட் வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காமல் கஞ்சத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சொந்த வீட்டிலேயே திருட ஜான்சிராணி முடிவு செய்தார். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவரால் திருட முடியாத நிலை இருந்தது. இதனையடுத்து அவருக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியுள்ளது. கொரோனா தடுப்பு கசாயம் எனக் கூறி ஒரு கசாயத்தை கணவருக்கு கொடுத்தார். அந்த கசாயத்தில் தூக்க மருந்து கலந்து இருந்ததால் சில நிமிடத்தில் வின்சென்ட் மயங்கி விழுந்து ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த 100 பவுன் நகைகளை திருடிய ஜான்சிராணி அதை அருகில் உள்ள ஒரு இடத்தில் புதைத்து வைத்து உள்ளார். அதன் பின் அவரும் மயக்கம் அடைந்தது போல் நாடகமாடி உள்ளார். தூக்கம் கலைந்து எழுந்த வின்சென்ட் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து தூத்துக்குடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது குறித்து விசாரணை செய்தபோது ஒரு கட்டத்தில் வின்சென்ட் மனைவி ஜான்சிராணி மீது சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து அவரிடம் துருவித்துருவி விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியது போலீசாரின் சந்தேகத்தை உறுதி செய்தது. அதன்பின் போலீசார் தங்களது பாணியில் விசாரித்த போது 100 பவுன் நகையை சொந்த வீட்டிலேயே திருடியதை ஜான்சிராணி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜான்சிராணி பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கணவர் வீட்டு செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்ததால் சொந்த வீட்டிலேயே மனைவி திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.