close
Choose your channels

Work from Home??? வீட்டில் இருந்தபடி சிறப்பாக பணியாற்றுவது எப்படி???

Thursday, March 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

Work from Home??? வீட்டில் இருந்தபடி சிறப்பாக பணியாற்றுவது எப்படி???


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளிலும் இதுதான் நிலைமை. தொலைத்தொடர்பு சார்ந்து இணையத்தில் வேலைப்பார்க்க முடிகிற தொழில் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீடுகளில் இருந்தபடியே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் இருப்பதால் அவர்கள், தங்களுக்குக் கொடுக்கப்படும் வேலைகளைச் சிறப்பாக செய்து முடிக்கின்றனர். ஆனால் புதிதாக வீட்டில் இருந்து வேலைப்பார்க்கும் பலருக்கு முதலில் சிறிய தடுமாற்றங்கள் ஏற்படலாம். அவர்களுக்காகச் சில பரிந்துரைகள்.

இடம்: வீட்டில் குழந்தைகள், மனைவி, கணவன் என்ற ஒட்டுமொத்த குடும்பமே ஒரே நேரத்தில் கூடியிருக்கும்போது, அட Work from Home தான??? என்று ஒரு சலிப்பு வரலாம். அதனால் பார்க்கக்கூடிய வேலையின் அளவு மிகவும் குறைந்து போவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஒரு விதத்தில் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்பினைக் கொரோனா ஏற்படுத்தித் தந்தாலும், அது அலுவலக வேலைகளை முற்றிலும் பாதிக்கும் தன்மையுடையது. எனவே அலுவலக வேலைகளைப் பார்ப்பதற்கு என்று தனியாக இடத்தை ஒதுக்குவது நலம். தனியாக அமர்ந்து எந்த இடையூறும் இல்லாமல் வேலையைத் தொடர்வதற்கு இந்தத் தனியிடம் கைக்கொடுக்கும். செல்லப்பிராணிகளையும் இந்நேரத்தில் தள்ளிவைப்பதே நல்லது.

நேரம்: வீட்டில் இருந்து தானே வேலைப்பார்க்கிறோம். இன்னும் கொஞ்ச நேரம் அசந்து தூங்கலாம் என்று நேரத்தைக் கோட்டைவிட்டு விட்டால், அலுவலகத்தில இருந்து கொடுக்கப்படும் வேலைகளைச் சரியாக முடிக்க முடியாது. எனவே தினமும் காலையில் அலுவலகத்திற்கு எத்தனை மணிக்கு புறப்பட்டு செல்கிறீர்களோ அந்த நேரத்திற்கு சரியாக உங்களது வேலைகளைத் தொடங்கி விடவேண்டும். காலை 9 – 5 என்றால் அது வீட்டிலும் அலுவலக நேரம் என்று மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருப்பவர்களிடமும் இதை முன்கூட்டியே சொல்லிவிடுவது நலம். இதனால் வீட்டில் இருந்து கொஞ்சம் கூட நன்மையே இல்லையா? என்ற கேள்வி வரலாம். நீங்கள் அலுவலகத்திற்கு பயணம் செய்யும் நேரம் முற்றிலும் இப்போது மிச்சமாகும். அந்த நேரத்தை உங்களது குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.


உடை: வீட்டில் தானே இருக்கிறோம். குளித்தால் என்ன? குளிக்காவிட்டால் என்ன? யார் கேட்கப்போகிறார்கள் என்று அசட்டையாக இருப்பது முற்றிலும் தவறு. சாதாரண உடைகளை அணிந்து கொண்டு வேலையைப் பார்க்கும்போத நம் மனதிற்குள் நம்மை அறியாமலே ஒரு சோம்பேறி ஒளிந்து இருக்க வாய்ப்பும் இருக்கிறது. எனவே அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்லும்போது எப்படி குளித்து, உடையணிந்து செல்கிறீர்களோ அப்படியே வீட்டில் இருப்பதும் நல்லது. கூடவே சுகாதாரமும் உறுதி செய்யப்படும்.

சாப்பாடு: அலுவலகம் செல்லும்போது எப்படி காலையில் டீ, காபி என்று ஆரம்பிப்பீர்களோ அப்படியே ஆரம்பிக்கலாம். ஆனால் வீட்டில்தானே இருக்கிறோம். கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வருவோம் என்று யோசித்தால் எல்லாம் கெட்டது என்று அர்த்தம். காலையில் தொடங்கும் அசட்டைத்தனம் நாள்முழுவதும் தொடருவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கிறது. எனவே எப்படி அலுவலகம் கிளம்பும்போது குறைவான நேரத்தை டீ, காபி அருந்துவதற்கு எடுத்துக் கொள்வீர்களோ அப்படியே தொடரவேண்டும். மதிய உணவு இடைவேளையின்போது குடும்பத்துடன் இணைந்து கொள்ளலாம். அதற்காக அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது.


அலுவலகத் தொடர்பு: வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சில நேரங்களில் அதீத மந்தம் தொற்றிக்கொள்ளும். இந்த உணர்வு வேலையைக் கெடுத்து விடும். எனவே உங்களது அலுவலகக் குழுவிடம் என்ன செய்யவேண்டும், அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று அடிக்கடி மெயில் வழியாக உறுதிப்படுத்திக் கொள்வது அல்லது பரிமாறிக்கொள்வது நலம் பயக்கும். இந்தப் பரிமாற்றம் சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும், அலுவலகத்தில் இருப்பது போன்ற பற்றுதலையும் ஏற்படுத்தித் தரும்.

தூக்கம்: வீட்டில் தானே இருக்கிறோம், சாப்பிட்டவுடன் சின்னதாக ஒரு தூக்கத்தைப் போடலாம் என்று வேலை செய்யும் இடத்தை விட்டு எழுந்திருக்கக் கூடாது. ஒருவேளை தூக்கம் வந்தால் அலுவலக வேலைகளைச் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அதாவது மேஜையிலேயே படுத்துக்கொள்ளுங்கள். அப்படி செய்தால் தான் நேரம் வீணாவதை உணர்ந்து அடுத்த வேலைகளைத் தொடரமுடியும்.

Extra duty: வீட்டில் தானே இருக்கிறோம், இன்னும் கொஞ்ச நேரம் வேலையைச் செய்யலாம் என வேலையை நீடிப்பதும் தவறு. ஒருவேளை அதிக நேரத்தை வேலைக்காகச் செலவிட்டால் உங்களுக்கே கூட இறுக்கமான மனநிலையைக் கொடுத்துவிடும். எனவே அலுவலக நேரம் முடிந்தவுடன் அந்த இடத்தை விட்டு எழுந்து ஒரு குட்டி நடையை போட்டு விட்டு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுங்கள்.

கவனச்சிதறல்: தனியாக உட்கார்ந்து வேலைப்பார்க்கிறோமே, யார் பார்க்கப் போகிறார்கள் என்று ஃபேஸ் புக், டிவிட்டர் திறந்தீர்கள் என்றால் மொத்தமும் கெட்டுவிடும். இப்படி நேரத்தை வீணாக்கும் எந்த சமூக வலைத்தளங்களையும் திறக்காமல் இருப்பது நல்லது. சமூக வலைத்தளங்களில் நேரம் போவதே தெரியாமல் வீணாக்கிவிட்டால் பின்பு உயர் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.


வேலையைக்கணக்கிடுதல்: தனியாக அமர்ந்து வீட்டில் வேலைப்பார்க்கும்போது ஏற்படும் மந்தநிலையைத் தவிர்ப்பதற்கு இன்று என்ன வேலைகளைப் பார்த்தோம் என்ற விவரங்களைத் தனியாகக் குறித்து வைப்பது நல்லது. மீண்டும் அலுவலகம் செல்லும்போது உயர் அதிகாரிகளுக்கு இந்த கணக்குகள் உதவலாம்.

வசதிகள்: தனியாக அமர்ந்து வேலைப்பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேவையான அனைத்து வசதிகளை முன்பே ஏற்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. ஒருவேளை வசதி குறைவான இடத்தில் அமர்ந்து வேலைப்பார்த்தால் முதுகு வலி போன்ற தேவையில்லாத பிரச்சனைகளும் வரலாம். எனவே உங்களது அலுவலகத்தில் இருப்பது போன்றே லேப்டாப், மேஜை, நாற்காலி, மின்விசிறி, தண்ணீர், இணைய வசதி போன்றவற்றை உறுதிப்படுத்தி கொள்வது நலம்.

மேற்கண்ட பரிந்துரைகள் வேலையை எப்படி ஆற்றலுடன் செய்வது என்பதற்கான ஒரு விதிமுறை தான். இந்த விதிகளில் சில நேரங்களில் சறுக்கலும் வரலாம். அதற்காக இப்படியெல்லாம் என்னால் பின்பற்ற முடியாது என மேம்போக்கான மனநிலையுடன் வேலைபார்த்தால் மந்தநிலை ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புண்டு. அதேபோல விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் நம் நேரம் நம் கட்டுக்குள் இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலையும் வரும். எனவே அலுவலகத்தை வீட்டிற்குள் வரவழைத்து திறமையுடன் பணியாற்றுவோம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.