நீச்சல் குளம், ஹெலிபேட் கொண்ட கார்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அதிசயம்!

  • IndiaGlitz, [Saturday,March 12 2022]

அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்ட ஒரு கார் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்தச் சாதனையைவிட அந்த காரில் உள்ள சிறப்பம்சம் பார்ப்போரை மலைக்க வைத்திருக்கிறது. காரணம் 100 மீட்டர் நீளம் கொண்ட அந்தக் காரில் நீச்சல் குளம், ஹெலிபேட், குட்டி கோல்ப் கிரவுண்ட் எல்லாம் பொருத்தப்பட்டு இருப்பதைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கலிபோர்னியாவில் வசித்துவந்த ஜே ஒல்பெர்க் என்பவர் ஒரு கார் பிரியராக இருந்து வந்துள்ளார். இவர் 60 அடி நீளம் மற்றும் 26 சக்கரம் பொருத்திய காரை கடந்த 1986 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்தக் கார் “தி அமெரிக்கன் ட்ரீம்“ என்ற பெயரில் அன்றைய காலக்கட்டத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

பின்னர் உலகின் நீளமான இந்தக் கார் இ-பே விற்பனை தளம் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அதை மைக்கேல் மேனிங் என்பவர் வாங்கியிருக்கிறார். அது மீண்டும் விற்பனைக்கு வரவே புளோரிடாவை சேர்ந்த மைக்கேல் டெசர் என்பவர் கடந்த 2019 இல் வாங்கியிருக்கிறார்.

இப்படியொரு அதிசயக் காரை வாங்கிய டெசர் தனது காரை மீண்டும் வடிவமைக்க நினைத்து காரின் பழைய முதலாளி மேனிங்கின் உதவியை நாடியுள்ளார். அவரும் டெசருக்கு உதவி செய்ததன் மூலம் 2 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க ட்ரீம் கார் ஒரு புது மாடல் காராக மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் 60 அடி நீளத்தில் இருந்த காரை தற்போது 100 அடி நீளத்திற்கு மாற்றியுள்ளனர். 75 பேர் பயணம் செய்யக்கூடிய இந்தக் காரில் டிவி, ப்ரிட்ஜ், ஷோபா செட், சிறிய கோல்ப் விளையாட்டு அரங்கம், சிறிய நீச்சல் குளம் மற்றும் வலிமையான ஒரு ஹெலிபேட்டும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் 26 சக்கரங்களைக் கொண்ட இந்தக் காரை அதன் இருபக்கங்களில் இருந்தும் இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் “தி அமெரிக்கன் ட்ரீம்“ கார் தற்போது லிமோ என்ற பெயரில் தனது பழைய சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. இந்தக் காரைப் பார்த்த பொதுமக்கள் பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.