close
Choose your channels

சீனா-கொரோனா வைரஸ்.. உண்மை நிலவரத்தை ஆவணப்படுத்த முயன்ற பத்திரிக்கையாளர் மாயம்..!

Monday, February 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனா-கொரோனா வைரஸ்.. உண்மை நிலவரத்தை ஆவணப்படுத்த முயன்ற பத்திரிக்கையாளர் மாயம்..!

சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், உலக அளவிலும் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகக் கடுமையான பாதிப்பில் இருக்கும் வுகான் நகரைப் பற்றிய செய்திகளை சென் கியுஷி மற்றும் ஃபாங் பின் ஆகிய பத்திரிகையாளர்கள் மொபைல் வழியாகச் சேகரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், சென் கியுஷி மர்மமான முறையில் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`சென் கியுஷியைக் கடந்த வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் தொடர்புகொள்ள முடியவில்லை' என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு சில தினங்களுக்கு முன்பு ஃபாங் பின் மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சடலங்களை வீடியோ எடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபாங்கை கைது செய்ததற்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்ததால், பின்னர் விடுவிக்கப்பட்டார்.

சென், இந்த வைரஸ் பாதிப்பால் சக்கர நாற்காலியில் இறந்து கிடக்கும் குடும்பத்தினர் ஒருவரின் அருகில் இருந்தபடி பெண் ஒருவர் தனது உறவினரை அழைப்பது, மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள் சிகிச்சை செய்ய ஆட்களின்றி சிரமப்படுவது போன்ற காட்சிகளை ஆவணப்படுத்தியுள்ளார். வுகானிலுள்ள முக்கிய மருத்துவமனைகள், உயிரிழந்தவர்களின் வீடுகள், மிகப்பெரிய குடியிருப்புகள் ஆகிய இடங்களுக்குச் சென்று வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பேசி அதையும் ஆவணப்படுத்தியுள்ளார்.

இறுதியாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில்,``ஒரு பெரிய அறையில் 1,000 படுக்கைகளை அடுக்குவது எளிது. ஆனால், அதில் 1,000 நோயாளிகள் எப்படி தங்கப்போகிறார்கள்? அன்றாடத் தேவைகளுக்கு என்ன செய்வார்கள்? 24 மணி நேரமும் முகமூடி அணிந்து செயல்படுவார்களா? போதுமான அளவில் ஆக்சிஜன் அவர்களுக்குக் கிடைக்குமா? போதிய அளவில் மருந்துகள் இருக்கிறதா?" போன்ற கேள்விகளை அரசை நோக்கி எழுப்பியிருந்தார். மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார். மருத்துவமனைகளில் இருக்கும் அலட்சியத் தன்மையையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இவற்றை ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த ஆவணங்களின் மூலமாகத்தான் வெளியுலகிற்கு வுகான் நகரத்தின் நிலைமையைக் குறித்து ஓரளவுக்குத் தெரிய வந்தது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பதிவுகளையும் சீனா நீக்கியுள்ளது. மாயமாவதற்கு முன்பு ஃபாங் காங் முகாமில் உள்ள மருத்துவமனைக்கு அவர் செல்லத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சி.என்.என் ஊடகத்திடம் பேசிய சென்னின் நண்பர்,``சென் மாயமாவதற்கு முன் ஆரோக்கியமான உடல்நிலையில் இருந்தார். அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் அவர் விரைவில் திரும்பிவர வேண்டும் என்பதை எண்ணிக் கொண்டிருக்கிறோம். அவரது பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.

காவல்துறை அதிகாரிகளோ, ``அவருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளனர். ஆனால், சரியான எந்தத் தகவலையும் காவல்துறையினர் வழங்க மறுப்பதால், இந்தச் செய்தி உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.

சமூக வலைதளங்கள் சீனாவில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பரப்பும் கணக்குகளையும் சீன அரசு முடக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் லீ மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவர் லீ மரணம் தொடர்பாக சீன மக்கள் அரசின் மீது கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos