Download App

Yaakkai Review

2011ல் வெளியான ‘ஆண்மை தவறேல்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் குழைந்த வேலப்பனனி இரண்டாவது படம் ‘யாக்கை’. முந்தைய படத்தில் ஆள் கடத்தல் குற்றம் பற்றி விரிவாக அலசியவர் இந்தப் படம் மருத்துவமனைகளில் நடக்கும் ஒரு குற்றத்தை ஒரு காதலின் பின்னணியில்  வைத்துப் படமெடுத்திருக்கிறார். எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

ஒரு மிகப் பெரிய தனியார் மருத்துவமனையின் நிறுவனர் (ராதாரவி) மர்ம நபரால் கொல்லப்பட்டு மருத்துவமனையின் 14ஆம் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்படுகிறார்.  கொலையை விசாரிக்கும்  காவல்துறை அதிகாரி  சகாயம் (பிரகாஷ் ராஜ்), கொல்லப்பட்டவரின் மகன் ஸ்ரீராம்தான் கொலையாளி என்று முடிவெடுத்து அந்தத் திசையில் விசாரணையைத் தொடர்கிறார்.

மறுபுறம் கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் கதிர்  (கிருஷ்ணா), தன்னுடன் படிக்கும் காவ்யா (சுவாதி ரெட்டி) என்ற பெண்ணைக் கண்டதும் காதல்வயப்படுகிறான்.

திடீரென்று அதே மருத்துவமனையில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றுபவரும், ஆம்புலன்ஸ் ட்ரைவரும், மேலும் ஒரு ஆட்டோ ட்ரைவரும் கொல்லப்படுகின்றனர். அந்தக் கொலைகளைச் செய்வது கதிர் என்பது திரையில் காட்டப்படுகிறது.
கதிர் ஏன் இந்தக் கொலைகளை செய்கிறான்? மருத்துவமனை அதிபரைக் கொன்றது யார்? ஸ்ரீராமுக்கும் இந்தக் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கெல்லாம் விடை சொல்கிறது படத்தின் இரண்டாம் பாதி.

ஒரு கார் 14ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளப்படுவதை லாவகமாகப் படம்பிடிக்கும் டாப் ஆங்கில் காட்சியுடன் படம் தொடங்குகையில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்புகிறது. அதைத் தொடரும் கொலை விசாரணைக் காட்சிகளும் ஓரளவும் பரபரப்பைக் கூட்டுகின்றன. இன்னொரு ட்ராக்காக வரும் காதல் காட்சிகளில் ஆங்காங்கே சில நல்ல ஐடியாக்கள் இருந்தாலும் அந்தக் காட்சிகள் அனைத்தும் தேவைக்கதிகமாக நீட்டிக்கப்பட்டிருப்பதுபோன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.

சற்று பொறுமை சோதிக்கப்பட்டாலும் இடைவேளையில் இரண்டாம் பாதி பற்றிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் சொதப்பலோ சொதப்பல்.  காதல் டிராக்குக்கும், கொலைகளுக்கும் இருக்கும் சம்பந்தம் மிக எளிதாக ஊகிக்கக் கூடிய அரதப் பழசான பழிவாங்கும் அம்சம்தான். அதை சொல்லிய விதத்திலும் சுவாரஸ்யம் எதுவும் இல்லை.

கதாநாயகியின் அப்பா (ஜி.மாரிமுத்து) பேச்சு மற்றும் செவித் திறனற்றவர். அதேபோன்ற குறைபாடுடைய குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்துகிறார். நாயகி அந்தக் குழந்தைகள் மீது பரிவுகொண்டவளாக பல்வேறு உதவிகளைச் செய்கிறாள். இதை எல்லாம் காட்ட, முதல் பாதியில் பல காட்சிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பேச்சுத் திறனற்ற சிறுவர்கள் செய்கை மொழியில் தேசிய கீதம் பாடுவது உள்ளிட்ட சில ரசிக்கவைக்கும் விஷயங்களும் இவற்றில் இல்லாமல் இல்லை. ஆனால் மையக் கதைக்கும் இந்த விஷயங்களுக்கும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறுவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனும்போது அவை அனைத்தும் இந்தப் படத்தில் எதற்காக என்று எண்ணமே மேலிடுகிறது.

இவ்வளவையும் மீறி, படத்தை ஓரளவு பார்க்க வைப்பது, சுவாதியின் அழகும் நடிப்பும், பிரகாஷ் ராஜின் அனுபவமும் நிதானமும் மிக்க நடிப்பு, யுவனின் சில பாடல்கள் மற்றும் பின்னணி இசை, குழந்தை வேலப்பனின் சில நல்ல வசனங்கள் (”பொண்டாட்டிய சந்தேகபடறவன்கூட புள்ளைய சந்தேகப்பட மாட்டான்”), சத்யா பொன்மாரின் கண்ணுக்கு விருந்தாக அமையும் ஒளிப்பதிவு ஆகியவையே.

நாயகனான கிருஷ்ணா, முதல் பாதியில் ரசிகர்கள் தன்னை கல்லூரி மாணவனாக ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகத்தில் ஓவராக சின்னப்பிள்ளைபோல் நடந்துகொண்டு எரிச்சலூட்டுகிறார். இரண்டாம் பாதியில் எமோஷனல் நடிப்பில் தேறிவிடுகிறார்.

’ஆரண்ய காண்டம்’, ‘ஜோக்கர்’, ‘குற்றமே தண்டனை’ ஆகிய படங்களில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய குரு சோமசுந்தரத்துக்கு இது ஒரு திருஷ்டிப் பொட்டு என்று சொன்னால் மிகையில்லை.  ஆங்கிலம் பேசும் பணக்காரத் திமிர் பிடித்த வில்லன் வேடத்துக்கு ஏனோ அவர் துளியும் பொருந்தவில்லை.

மொத்தத்தில் ‘யாக்கை’, திரைக்கதையில் ஆங்காங்கே சில நல்ல ஐடியாக்களும் திரையில் தேர்ந்த நடிப்பு, துடிப்பான இசை, நல்ல  ஒளிப்பதிவு போன்ற நல்ல விஷயங்களும் இருந்தாலும் ஒட்டுமொத்தப் படமாகத் தேறவில்லை.
 



Rating : 1.5 / 5.0