close
Choose your channels

Yeidhavan Review

Review by IndiaGlitz [ Friday, May 12, 2017 • தமிழ் ]
Yeidhavan Review
Banner:
Friends Festival Films
Cast:
Kalaiyarasan, Satna Titus, Vela Ramamoorthy, Aadukalam Naren, Rajkumar, Saretheran, Valavan, Madras Vinoth, Krishna Kumar, Gautham, Sandra Amy
Direction:
Sakthi Rajasekaran
Production:
S. Sudhakaran
Music:
Paartav Barggo

'எய்தவன்' படத்தின் மூலம் தமிழகத்தின் சில தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பண வெறியால் மாணவர்களின் எதிர்காலமும் மருத்துவத் துறைக்கும் ஏற்படவிருக்கும் ஆபத்தை விரிவாகப் பேசியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சக்தி ராஜசேகரன். படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவனான கிருஷ்ணா (கலையரசன்)  கள்ளப் பண நோட்டுகளை கண்டுபிடிக்கும் மெஷின்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருப்பவன். அவனது ஒரே தங்கைக்கு மருத்துவராவதுதான் லட்சியம். தன் சக்திக்கு மீறி பணம் திரட்டி  ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் தங்கையை சேர்க்கிறான் கிருஷ்ணா. ஆனால் அந்தக் கல்லூரிக்கான உரிமத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்திருப்பது தெரியவருகிறது. சீட் வாங்க தான் கொடுத்த தொகையை திருப்பிக் கேட்கிறான் கிருஷ்ணா. அப்போது திடீரென்று அவனது தங்கை ஒரு விபத்தில் இறந்துவிடுகிறாள்.

மாணவர்களைப் பணம் வாங்கி ஏமாற்றிய கல்லூரியின் உரிமையாளர் கவுதம் (கவுதம்) பண பலமும் செல்வாக்கும் மிக்கவன் என்பதால் அவனை புஜபலத்தைவிட புத்தியைவைத்துதான் வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுக்கிறான் கிருஷ்ணா.  அதோடு தன் தங்கையின் மரணத்துக்கு நீதி கிடைப்பது மட்டுமில்லாமல் பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களின் மருத்துவக் கல்வியும் வருங்காலமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நினைக்கிறான். அதற்கேற்ற திட்டங்களை வகுக்கிறான்.

அந்தத் திட்டங்கள் பலனளித்தனவா என்பது மீதிக் கதையில் சொல்லப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பல கோடி லஞ்சம் புரள்வது அனைவரும் அறிந்ததே.  பெரும்பணக்கார மருத்துவக் கல்லூரி உரிமையாளர்கள், அவர்களது அடியாட்கள், பணம் பெற்றுத் தரும் ஏஜெண்டுகள், துணை நிற்கும் காவல்துறையினர், என மருத்துவக் கல்லூரி ஊழலின் வலைபின்னலைப் பற்றிய அதிர்ச்சிதரும் உண்மைகளை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் வடிவில் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் சக்தி ராஜசேகரன். அந்த முயற்சியில் பெருமளவு வெற்றியும்பெறுகிறார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை அதில் லஞ்சப் பணம் எப்படிப் புரள்கிறது அது எங்கு தொடங்கி யார் மூலம் செல்ல வேண்டிய இடத்தைச் சென்றடைகிறது என்பதையெல்லாம் விரிவாகப் பதிவுசெய்திருப்பதில், கதைக் கருவுக்குத் தேவையான தகவல் திரட்டலில் இயக்குனரின் உழைப்பு பிரமிக்கவைக்கிறது.

இரண்டாம் பாதியில் சாதாரண மனிதனான நாயகன் உடல் வலிமை, பண வசதி, ரவுடிகளிடம் செல்வாக்கு என அனைத்து விதங்களிலும் பலம் பொருந்திய வில்லனை , நேரடியாக எதிர்கொள்ளாமல் வேறொருவரை அம்பாக எய்து அதன் மூலம் தன் இலக்கை அடைவதுபோல் அமைந்திருக்கும் திரைக்கதை படத்தை வழக்கமான ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களிலிருந்து வேறூபடுத்தி ரசிக்க வைக்கிறது. இந்த விஷயத்துக்குப் பயன்படும் கூலிப்படைக் கொலைகாரன்  தர்மன் (கிருஷ்ணா) பாத்திரமும் அது தொடர்பான கிளைக் கதையும் மையகதையுடன் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால் படத்தின் முடிவு சற்று ஏமாற்றமளிக்கிறது. அதுவரை சாதாரண மனிதனாக காய் நகர்த்தும் கிருஷ்ணா திடீரென்று சூப்பர் ஹீரோவாக மாறுவதை ஏற்க முடியவில்லை. அதேபோல் அளவுக்கதிகமான கதாபாத்திரங்கள் வந்துபோவதால் படத்தின் நிகழ்வுகளைப் பின்தொடர்வது சற்று கடினமாக உள்ளது. இரண்டு பாடல்கள் உட்பட கமர்ஷியலுக்கென்று சேர்க்கப்பட்ட சங்கதிகளைத் தவிர்த்திருந்தால் ‘எய்தவனின் அம்பு இன்னும் கூர்மையாகத் தைத்திருக்கும்.

 நடிப்புக்கு பெரிய சவாலில்லாத பாத்திரத்தில் கலையரசன் தனது பங்கை சரியாகச் செய்திருக்கிறார். கதாநாயகி சட்னா டைடஸுக்கும் இது பொருந்தும். ஆனால் அவரை நாயகனின் காதலியாக மட்டும் காட்டாமல் போலிஸ் அதிகாரியாகக் காட்டி திரைக்கதை நகர்வுக்கு அந்தப் பாத்திரத்தைப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

கவுதம், தோற்றத்திலும் உடல்மொழியிலும் ஒரு இளம்  பணக்கார வில்லனைக் கண்முன் நிறுத்துகிறார். ஆடுகளம் நரேன் வழக்கம்போல் முத்திரை பதிக்கிறார். நாயகனின் அப்பாவாக வரும் வேல ராமமூர்த்தியை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். தர்மனாக நடித்துள்ள கிருஷ்ணா சிறப்பாக நடித்துள்ளார்

பார்த்தவ் பார்கோவின் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் ஐ.ஜே.ஆலனின் படத்தொகுப்பும் திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்வதற்கு தக்க துணைபுரிந்திருக்கின்றன. 

மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தியிருக்கும் ‘எய்தவன்’ படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

 

Rating: 2.75 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE