46 வருடங்கள் கழித்து உருவாகும் இரண்டாம் பாக படத்தில் யோகிபாபு

  • IndiaGlitz, [Wednesday,March 20 2019]

பழம்பெரும் இயக்குனர் வி.சி.குகநாதன் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். புகழ்மணி இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கடந்த 1973ஆம் ஆண்டு விசி.குகநாதன் கதை வசனம் எழுதிய 'காசி யாத்திரை' என்ற படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது. எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான விகே ராமசாமி, சோ ராமசாமி, தேங்காய் சீனுவாசன், எம்.ஆர்.ஆர். வாசு, சுருளிராஜன், மனோராமா உள்பட பலர் நடித்திருந்தனர்.

அதேபோல் தற்போது உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற படத்தில் தற்போதைய நகைச்சுவை நடிகர்களான ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா, சிங்கமுத்து ஆகியோர்களுடன் முக்கிய வேடத்தில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.