அதுவும் நடக்காம போச்சே: தந்தையான யோகிபாபுவின் ஜாலி கமெண்ட்!

  • IndiaGlitz, [Wednesday,December 30 2020]

கல்யாண சாப்பாடு தான் போட முடியவில்லை என்றால் சீமந்த சாப்பாடாவது போடலாம் என்று நினைத்தேன், ஆனால் அதுவும் நடக்காமல் போச்சு என்று நண்பர்களிடம் யோகி பாபு ஜாலியாக கமெண்ட் அடித்துள்ளார்.

நடிகர் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் அவருடைய குலதெய்வம் கோவிலில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த யோகிபாபு திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதால் வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சு பார்கவி கர்ப்பமடைந்தார். இதனை அடுத்து சீமந்தம் நிகழ்ச்சி நடத்துவதற்கு யோகி பாபு தனது வீட்டில் பிரமாண்டமான ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 100 பேர் வரை சீமந்த நிகழ்ச்சிக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார் என்பதும் அதற்கான விருந்துகளும் தயாராகி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீமந்தம் நிகழ்ச்சி நடப்பதற்கு முந்தைய நாளே மஞ்சு பார்கவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. இதனால் சீமந்த நிகழ்ச்சியும் ரத்தானது. இதனை அடுத்து கல்யாண சாப்பாடு தான் போட முடியவில்லை, சீமந்த சாப்பாடாவது போடலாம் என்று நினைத்தால் அதுவும் நடக்காமல் போச்சே என தனது நெருக்கமான நண்பர்களிடம் யோகிபாபு ஜாலியாக கமெண்ட் அடித்து பிடித்து உள்ளார்.