21 வயதில் அட்லாண்டிக் கடலை அசால்ட்டாக கடந்த பெண்… குவியும் பாராட்டு!

  • IndiaGlitz, [Thursday,February 25 2021]

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜாஸ்மீன் ஹாரிசன் எனும் இளம்பெண் அட்லாண்டிக் கடலை தனி ஆளாக கடந்து புது சாதனை படைத்து உள்ளார். 21 வயதே ஆன இவர் 70 நாட்களாக படகில் பயணித்து தற்போது சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறார். நீச்சல் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் தனது சாதனை மூலம் 10 ஆயிரம் டாலர் நிதியையும் திரட்டி இருக்கிறார்.

அட்லாண்டிக் கடலை கடப்பது என்பது உலகத்திலேயே மிக சவாலான விஷயமாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற சவாலான விஷயங்களை அவ்வபோது செய்து சிலர் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது 21 வயதில் முதன் முறையாக தனி ஆளாக இருந்து அட்லாண்டிக் கடலை கடந்து புது சாதனையை படைத்து இருக்கிறார். இதற்கு முன்பு அமெரிக்காவின் கேட்டி ஸ்பாட்ஸ் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு 22 வயதில் கேட்டி செய்த சாதனையை 2021 ஆம் ஆண்டு 21 வயதில் ஜாஸ்மீன் ஹாரிசன் முறியடித்து இருக்கிறார். மேலும் தன்னுடைய படகு பயணித்தின் போது 40 கிலோ சாக்லேட் சாப்பிட்டதாகவும் வழியில் மிகப்பெரிய திமிங்கலம், மார்லீன் மீன்கள், டால்பின் மீன்களைப் பார்த்தாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார். கரையை அடைவதற்கு சுமார் 100 கிலோ மீட்டர் இருக்கும்போது படகு ஒட்டுமொத்தமாக கவிழ்ந்தும் அசராது இந்த சாதனையை ஜாஸ்மீன் செய்து இருக்கிறார். ஒற்றை ஆளாக 70 நாட்கள் கடலில் பயணித்து புது சாதனையைப் படைத்து இருப்பது பெரும் வியப்பாக பார்க்கப்படுகிறது.