ஆன்லைன் ரம்மி விவகாரம்: விராட் கோலி, தமன்னா கைது செய்யப்படுவார்களா?
- IndiaGlitz, [Friday,July 31 2020]
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் விளையாட்டுக்களால் பலர், குறிப்பாக இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து ஒருசிலர் தற்கொலைக்கு முயல்வதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்த வழக்கு ஒன்றை விசாரணை செய்த நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது குறித்து மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. ஏற்கனவே தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விளம்பரங்களில் நடித்த விராட் கோலி மற்றும் தமன்னா ஆகியோர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் தாக்கல் செய்த இந்த மனு, ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்த விராட் கோலி தமன்னா கைது செய்யப்படுவார்களா? என்பதை ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.