அதிமுகவை காப்பாற்ற அதிரடி முடிவை எடுப்பேன். பிரபல நடிகை

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் அவருடன் பல படங்கள் நடித்த பிரபல நடிகை லதா, ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவின் விசுவாசி. கட்சியில் நேரடியாக பணிபுரியவில்லை எனினும் அவ்வப்போது அதிமுகவுக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்.

இந்நிலையில் தற்போது உள்ள அதிமுகவின் குழப்பநிலையில் மனவேதனை அடைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதே நிலை அதிமுகவில் நீடித்தால் புரட்சி தலைவர் ஆரம்பித்த அதிமுகவை காப்பாற்ற தான் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். நடிகை லதாவின் அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:

அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பலமுறை அறிக்கையின் வாயிலாக எந்த சூழ்நிலையிலும் என் குரு மக்கள் திலகம் எம். ஜி. ஆர் உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாகிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உடைந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளையும், மூத்த பொறுப்பாளர்களையும் ஒற்றுமையுடனும், கட்டுகோப்போடும் இருந்து நல்ல முடிவு எடுத்து கட்சி உடையா வண்ணம் செயல்படுமாறு கேட்டிருந்தேன். அதே சமயத்தில், பொதுமக்களும் அடிமட்டத் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளும் விதமாக தலைமை இருக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.

ஆனால் இப்பொழுது கட்சியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள் கட்சியை உருவாக்கும் பொழுது உடனிருந்து அவர் பட்ட கஷ்டங்களை பார்த்தவள் நான். ஆனால் இப்பொழுது அவர் பட்ட கஷ்டங்கள் வீணாகி விடுமோ என்கிற கவலை எனக்கு மேலோங்கி உள்ளது. அவர் கட்சியை உருவாக்கியதே மக்கள் சேவைக்காக மட்டும் தான். அதனை முன்னிறுத்தாமல் செயல்பட்டதன் விளைவே இந்த நிலைமை என்று தோன்றுகிறது.

செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு கட்சியின் கழகப்பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் நீடித்தாலும், ஆட்சிமுறை என்று வந்தபோது ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதலின் படி ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் திறம்பட செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா அவர்களிடம் நற்பெயர் வாங்குவதும், நம்பிக்கை சம்பாதிப்பதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆயினும், சாதாரண நகர மன்ற தலைவராக இருந்தவருக்கு எம்.எல்.ஏ பதவியை அடுத்து அமைச்சர் பதவி தந்து, இக்கட்டான சூழ்நிலைகளில் முதலமைச்சராக தனது பதவியில் ஓ. பன்னீர் செல்வத்தை அமர வைத்ததற்கு காரணம் அவரது கடமை உணர்வும் அவர் ஜெயலலிதா மீது கொண்ட விசுவாசமும் தான். அதனால் தான் பலபேர் உடனிருந்தாலும் ஆட்சி, கட்சி என வந்த போது பன்னீர் செல்வதிற்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்.

மெரீனாவிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஜல்லிக்கட்டிற்கு போராட்டம் நடத்திய போது அனைத்து விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு, டெல்லியில் ஒரு நாள் முகாமிட்டு தமிழகத்தின் சூழ்நிலையை எடுத்துக்கூறி, மத்திய அரசின் உதவியுடன் தனது சொந்த முயற்சியில் தடையை நீக்க ஆவன செய்தார். இவ்வாறு திறம்பட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து, தற்போதைய கழகப்பொதுச்செயலாளர் முதல்வராக அவசரப்படுவதற்கு என்ன காரணம்? அதற்கான அவசியம் என்ன? அந்த அவசரத்தின் விளைவு தான் இன்று ஆட்சியில் இருக்கும் நம் கட்சி உடையக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையும் ஆட்சியில் அமர்ந்த நம் கட்சியினை ஆச்சரியத்துடன் பார்த்த அனைவரும் இன்று, கட்சியின் நிலையையும், ஒற்றுமையின்மையும் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம், இந்தியாவைத் தாண்டி உலகமே நம் கட்சியினை கேலிக்கூத்தாக பார்க்கும் நிலையை உருவாக்கி விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. மக்கள் திலகம் உருவாக்கிய கட்சிக்கு வந்த இந்த நிலையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மூத்த நிர்வாகிகள், முக்கியப் -பொறுப்பாளர்களிடம் இருந்த நம்பிக்கையில் தான் அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் மட்டும் வெளியிட்டு வந்தேன். இந்தக் கட்சியைக் காப்பாற்றும் கடமை எனக்கும் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் கட்சிக்கு என் கடமையை செய்யும் பொருட்டு, அதிரடி முடிவினை எடுக்கவும் தயங்க மாட்டேன்.

- லதா

சென்னை

09-02-2017.

More News

சிவாஜி பேரனின் 2வது படத்தில் விஷ்ணு-மஞ்சுமா மோகன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பேரனும் ராம்குமார் மகனுமான துஷ்யந்த் தயாரித்த 'மீன்குழம்பும் மண்பானையும்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகிய நிலையில் தற்போது அவர் தனது இரண்டாவது தயாரிப்பை தொடங்கவுள்ளார்...

அதிமுக பெண் எம்.எல்.ஏ திடீர் மாயம். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

ஓபிஎஸ், சசிகலா யாரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தாலும் அவர் கண்டிப்பாக சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாய நிலை தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளது.

சசிகலா ஆதரவு அமைச்சருக்கு அரவிந்தசாமியின் பதிலடி

தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற அசாதாரண சூழ்நிலை இருக்கும் நிலையில் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம், நையாண்டியுடன் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் அவர்தான் முதல்வர். சு.சுவாமி

பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சற்றுமுன்னர் பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் சசிகலா முதல்வர் பதவியேற்பது குறித்து கூறும்போது, 'சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை...

நல்லது நடக்கும். தர்மம் நிச்சயம் வெல்லும். கவர்னரை சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி

தமிழக முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் சற்று முன்னர் தமிழக கவர்னரை சந்தித்துவிட்டு தனது இல்லத்தில் திரும்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்...