close
Choose your channels

யார் என்ன சொன்னாலும் கேட்க வேண்டாம். எனக்கு நீதான் முக்கியம்: ரஜினி குறித்து பாரதிராஜா

Wednesday, December 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

"இன்று பூகம்பமான ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. ரஜினி அரசியலுக்கு இப்போது வருவார், அப்போது வருவார், எப்போது வேண்டுமானாலும் வருவார் என்றெல்லாம் வதந்திகள் வெளியானபோது, கட்சியை அறிவிக்க இருந்தார்.

எனக்கு அரசியலில் நுழைவதில் உடன்பாடில்லை என்று நண்பனான ரஜினியுடன் சண்டையிட்டுள்ளேன். என் நண்பன் ரஜினிக்கு இனிமேலும் உச்சமா? இமயமலை உச்சிக்கு மேல் உச்சி இல்லை. பணம், பொருள், புகழ் அத்தனையும் வந்துவிட்டது. அதற்கு மேல் சிகரம் எதுவுமில்லை. இனிமேலும் குதித்தாலும் வேஸ்ட்தான்.

"நீ புல்லில் நடந்தாய், பூக்களின் வாசனை முகர்ந்து நடந்தாய், உன் பாதங்கள் புனித நீரிலேயே நனைந்து வந்தன. புழுதியில் உன் கால் பதிய வேண்டுமா" என்று கேட்டேன். அது அவனுக்குத் தெரியும். இதெல்லாம் காலச்சக்கரங்களில் ஓடிவிட்டது. அரசியல் சூதாட்டக் களம் என்பது வேறு. கலைஞர்களின் களம் என்பது வேறு.

என்னால் அரசியல் சூதாட்டத்தில் காய் நகர்த்த முடியாது. ஏனென்றால், மென்மையான மக்களையும், மனிதர்களையும், பூக்களையும், நதிகளையும், மேகங்களையும் ரசித்தவன். நான் உள்ளே நுழைய வேண்டுமென்றால் என் கை கறைபடிய வேண்டும். கட்சி நடத்த வேண்டுமென்றால் என் கை கறைபடிய வேண்டும். நான் அந்த மாதிரி ஆளில்லை. மரணத்தின் போதும் என் கதை, என் உழைப்பால் நான் வாழ்ந்தேன். என் உழைப்பால் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் உழைப்பில் உள்ள ஊதியத்தில் இவர்கள் என்னைப் புதைக்கப் போகிறார்கள். இதுதான் நான். இதை நான் அவனிடம் பேசினேன்.

ஹைதராபாத் படப்பிடிப்புக்குச் சென்றபோது, அங்கு 6 பேருக்குக் கரோனா. அதற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதித்தது பெரிய விஷயமல்ல. நான் எஸ்பிபியை மருத்துவமனையில் பார்த்தேன். அந்த வலி எனக்குதான் தெரியும். என் நண்பனை இழந்த வலி. கூட இருப்பவர்கள் ஆயிரம் சொல்லலாம் அது வேறு. உன் வலி, உன் வேதனை உன் உடம்புக்கு மட்டும்தான் தெரியும். உன் மனதுக்கு மட்டும்தான் தெரியும். மருத்துவமனையில் இருக்கும்போது பேசினேன்.

எப்போதுமே அவனைத் தலைவா என்று கூப்பிடுவேன். "தலைவா.. நீ எட்டாத உயரமில்லை. இனியும் உனக்கு இந்த அரசியல் தேவையா. மனநிம்மதிதான் தேவை. ஒரு பிறப்புதான். இன்னொரு பிறப்பில்லை. நீ பெரிய ஆன்மிகவாதி. கடவுள் உனக்கு அனைத்து அனுக்கிரகங்களையும் கொடுத்திருக்கிறான். இதற்கு மேல் நீ எங்கு போக முடியும். ப்ளீஸ் அரசியலுக்கு வருவது குறித்து யோசி" என்று சொன்னேன்.

அப்போது நான் அழுதேன். நீ அரசியல்வாதியாகி பெரிய ஆளாகி எல்லாம் ஒன்றுமில்லை. என் ரஜினி என் நண்பனாகக் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என்று சொன்னேன். கண்ணீருடன் சொன்னேன். அவனுக்கும் அதே உணர்வு இருந்தது. என்ன முடிவெடுப்பார் என்பது தெரியாமல் இருந்தேன்.

இப்போது ஒரு முடிவெடுத்திருக்கிறான். சரியான முடிவு. அவன் யோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டான். முன்பு எல்லாம் ஆரம்பிக்கப் போவது குறித்துச் சொன்னான். என்னதான் இருந்தாலும் மனிதனுக்குச் சில குழப்பங்கள் வரும். அல்டிமேட்டாக யோசிக்கும்போது முடிவு வரும். ரஜினி எடுத்த முடிவு சரியான முடிவு. எங்கு நான் பெருமைப்பட்டேன் என்றால், ரஜினி ரசிகர்கள் உங்களை நம்பி இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம். அரசியல் பயணம் வரும் என்று எதிர்பார்த்தோம்.

திடீரென்று கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கொதித்துவிடுவார்களோ என நினைத்தேன். ஏனென்றால் அவன் வெறிபிடித்த ரசிகன். அனைவருடைய பேச்சையும் பார்த்தேன். எந்தவொரு எதிர்பார்ப்புமே இல்லாமல் பயணப்பட்டு இருக்கிறான். ரஜினி என்ன சொல்கிறாரோ அதுதான். எங்களுக்கு அவருடைய உயிர் முக்கியம், உடல் முக்கியம் என்றான். அவருடைய ரசிகர்களுக்குப் பாராட்டுகள். அப்படிப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருப்பது பெரிய விஷயம்.

ஆன்மிகத்தின் உச்சத்தில் நீ ஜெயித்துள்ளாய். நல்ல முடிவு எடுத்திருக்கிறாய் ரஜினி. ஐ லவ் யூ. நீ எந்த மொழிக்கும் சொந்தக்காரன் அல்ல. தமிழக மக்கள் உன்னை விரும்பினார்கள். நீ மராட்டியன் அல்ல, நீ கன்னடன் அல்ல, நீ தமிழன். அதை இப்போது ஒப்புக்கொள்வேன். நான் முதல்வராக வரமாட்டேன் என்று சொன்னாய், தமிழன்தான் வருவான் என்று சொன்னதற்கு கை தட்டினேன். உனக்காக வேண்டிக் கொள்கிறேன்.

3 நாளுக்கு முன்னால் உனக்காகக் கோயிலுக்குச் சென்று வேண்டினேன். போன் பண்ணினேன். அழுதுகொண்டே பேசினேன். ஏனென்றால் நீ எனக்கொரு நல்ல நண்பன். இது ஒரு சாக்கடை. நீ இங்கிருந்தே மக்களுக்கு நல்லது செய்யலாம். யாருடைய சொல்லையும் கேட்காமல், தனித்த முடிவு எடுப்பதில் நீ தலைவன். கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். அந்த முரட்டுத்தனத்தில் எடுத்த முடிவை வரவேற்கிறேன். யார் என்ன சொன்னாலும் கேட்க வேண்டாம். நீ முக்கியம், உன் உயிர் முக்கியம், உன் உணர்வு முக்கியம். இந்த ரசிகர்களுக்கு நீ முக்கியம்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.