close
Choose your channels

2020 -2021 மத்திய பட்ஜெட் – ஒரு அலசல்

Sunday, February 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2020 -2021 மத்திய பட்ஜெட் – ஒரு அலசல்

இந்தியப் பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிகவும் வலுவாகவே உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தப் பட்டுள்ளது. துடிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்களின் இலக்கு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. ஆட்சியில் 2014 முதல் அருண் ஜெட்லியே தனது தலைமையின் கீழ் மத்திய பட்ஜெட்டை தயார் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். உடல் நலக் குறைவு ஏற்பட்ட சமயத்திலும் நிதின் கட்கிரியின் உதவியோடு அருண் ஜெட்லியே மத்திய பட்ஜெட்டை தயார் செய்தார் எனபதும் குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன் தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019 – 2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமானத்தின் வரி சலுகை அளித்ததால் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகக் கருதப் பட்டது.

2019 – 2020 சிறப்பம்சம்

பெட்ரோல் பொருட்களின் மீது கூடுதல் வரி, தங்கத்தின் இறக்குமதிக்கு கூடுதல் வரி போன்றவை சாமானிய மக்களுக்கு அழுத்தம் தரக்கூடியதாகவே இருந்தது. ஆனால் வீடு வாங்குபவர்களை ஊக்கு விக்கும் விதமாக ரூ.45 லட்சத்திற்கும் குறைவாக வீடு வாங்கும்போது கடன் தொகையில் சலுகை, புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கான வரி 12% லிருந்து 5% குறைப்பு, மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பு, சிறு வணிகர்களுக்கும் பென்சன் திட்டம் போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் பொருட்களை விநியோகம் செய்யும் நோக்கத்தில் தான் பட்ஜெட் உருவாக்கப் பட்டிருந்தது.

2019 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட் முழுக்க முழுக்க மக்கள் மத்தியில் பொருட்களை விநியோகம் செய்வதை அம்சமாக கொண்டிருந்த பட்சத்தில் அதே காலாண்டில் இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்களின் பொருட்கள் விற்பனை குறைவினைக் காரணம் காட்டி உற்பத்தியை குறைத்து விட்ட நிகழ்வுகளும் அரங்கேறின. பிரிட்டானியா முதற் கொண்டு பல்வேறு மோட்டார் வாகனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தி விட்டன. பொருட்களை வாங்க வைக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்த பட்ஜெட்டில் தான் இத்தகைய மோசமான சம்பவங்கள் அரங்கேறின.

2019 மத்திய பட்ஜெட்டில் வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு அறிவித்து இருந்த நிலையில் பல்வேறு பெரு நிறுவனங்கள் மற்றும் பொதுவுடைமை வங்கிகளின் வாராக் கடன்களை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு மத்திய அரசின் நிதி சுமையை மேலும் அதிகமாக்கியது. வாராக்கடன்களை அறிவிக்கும்போது அந்த நிதியை மத்திய அரசு பொது செலவீனங்களுக்காக வைத்துள்ள பணத்தைக் கொண்டு சீர் செய்கிறது. பின்பு பொது செலவீனங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலைமை, கூடவே மக்களிடம் பொருட்களை வாங்கும் சக்தியும் குறைகிறது. மக்கள் தங்களின் அன்றாட பொருட்களை வாங்க முடியாத சூழல் உருவாகும்போது பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இன்னும் திண்டாட்டமான நிலைமை உருவாகிவிடும்.

இந்தியாவில் தற்போது பணவீக்கம் 7.5% என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பணவிக்கம், பொருட்களை வாங்கும் சக்தி குறைவு போன்ற சூழலில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 3.5% GDP ஆக குறைந்து விட்டதை ஊடகங்களும் பொருளாதார அறிஞர்களும் சுட்டிக் காட்டி வருகின்றனர். இதனை சீர் செய்தவற்கான அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ள மத்திய பட்ஜெட்டில் இருக்கிறதா என்பதே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

2020-2021 மத்திய பட்ஜெட்

இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என உலக நாடுகள் கூட குற்றம் சாட்டும் நிலையில் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டு அது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பட்ஜெட் தாக்கலின் போது சீனா-அமெரிககா இடையிலான வர்த்தக போர் உலக நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை என்ற பொருள் பட தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரம் தற்போது வலுவாகவே இருப்பதாகத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட போது இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது என்ற உலக நாடுகள் முழுக்க வரவேற்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. பின்னர் கடந்த 9 காலாண்டுகளாக உள்நாட்டு உற்பத்தி 3.5% தாண்ட வில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 3% க்கும் குறைவாக இருக்கும்போது அந்நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக உலகம் முழுக்க பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் கட்டுப்படுத்த ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு, காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு, வங்கி டெபாசிட் தொகை அதிகரிப்பு, குழாய் வழியே சமையல் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் விரிவாக்கம், சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு, எரிசக்தி துறைக்கு 22,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பாரத் நெட் வொர்க் இலவச இணைய வசதி – ரூ.6,000 கோடி ஒதுக்கீடு, சென்னை- பெங்களூரு , டெல்லி- மும்பை இடையே புதிய வர்த்தக வழித்தடங்கள், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் திட்டம் – ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு, இந்தியாவில் தொழில் தொடங்குவதை ஊக்கப்படுத்த ரூ.27,300 கோடி ஒதுக்கீட்டில் மேம்பாட்டு திட்டங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகள், கல்வித் துறைக்கு ரூ.99, 300 கோடி ஒதுக்கீடு, திறன் மேம்பாட்டிற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு, சுகாதாரத் துறைக்கு ரூ. 69,000 கோடி ஒதுக்கீடு, விவசயாத் துறைக்கு ரூ. 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு, பெண்கள் தனி தொழிலைத் தொடங்குவதற்கு வசதியாக ரூ.28,000 கோடி கடன் வசதிகள் எனப் பல்வேறு அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.

தனி நபர் வருமான வரிவிகிதம் குறைப்பு - 2020 -2021 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரிவிகிதம் குறைக்கப் பட்டுள்ளது. சென்ற ஆண்டு (2019) நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 2.5 லட்சம் ரூபாய் வரை வரி விதிப்பு விலக்கு இருந்த நிலையில் அதனை 5 லட்சம் ரூபாய் வரை நீடிக்கப் பட்டுள்ளது. மேலும், 7.5 -10 லட்சம் ரூபாய் வரை 10% வரி, 10-12.5 லட்சம் ரூபாய் வரை 20% வரி, 12.5 -15 லட்சம் ரூபாய் வரை 25% என்று முன்பிருந்ததை விட வருமான வரி விகிதங்கள் குறைக்கப் பட்டுள்ளன.

வெளிநாட்டினர் இந்தியாவில் தொழில் தொடங்குவதையும், சிறு குறு விவசாயிகள் தொழில் முனைவோர் தங்களது தொழில் வருவாயைப் பெருக்கவும் வசதியான திட்டங்கள், விவசாயிகள் தங்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு, விலை நிர்ணயிக்க உரிமை, பொருட்களின் சேமிப்பு கிடங்கு போன்றவற்றில் அக்கறை என்று மிகவும் நேர்த்தியான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் கொடுக்கப் பட்டுள்ள நிதி ஒதுக்கீடு முழுமையும் செயல்படுத்த முடியுமா என்பதே தற்போது பொருளாதார வல்லுநர்களின் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் இவ்வளவு பெரிய தொகையை மத்திய அரசிற்கு செலவழிக்கும் சக்தி இருக்கிறதா என்கிற ரீதியில் சந்தேகம் எழுப்பப் பட்டு வருகின்றன.

மக்கள் மத்தியில் பொருட்களை வாங்கும் திறன் குறைந்து விட்டதைச் சரிசெய்ய போதுமான அம்சங்கள் இல்லை என்பதும் மற்றோர் தரப்பினரின் கருத்து. மக்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் வேலை வாய்ப்பினை அதிகப்படுத்த வேண்டும். பல வழிகளில் தொழில் முனைவோரின் வாய்ப்புகளை அதிகப் படுத்தி வந்தாலும் இதற்கான முழுமையான தீர்வுகள் எட்டப் படுமா என்பதைக் குறித்து சந்தேகமும் இருக்கிறது என பட்ஜெட் குறித்துத் தெரிவிக்கப் பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் தனியார் மயமாதல், மருத்துவ கல்லூரிகள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குதல், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்கள் போன்றவை சர்ச்சைக்கு உரிய விதத்தில் அமைந்து இருப்பதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப் படுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி உள்நாட்டு கட்டமைப்புகள் வலிமைப் படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கான செலவீனங்களே சரி செய்யப் படாத போது பட்ஜெட்டில் உள்ள கட்டமைப்புகளின் செலவீனங்கள் என்னவாகும் என்பதும் பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய அம்சமாகவே இருக்கிறது.

மேலும், ஜி.எஸ்.டி அறிமுகப் படுத்திய நாட்களில் இருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப் பட்டு வருகின்ற நிலையில் எளிமைப் படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஏப்ரல் 2020 இல் தொடங்கும் என நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது பல பொருட்களில் ஜி.எஸ்.டி வரி விகிதத்தை குறைத்து வெளியிடப்படுமா? அல்லது அதிகரித்து காணப்படுமா? என்ற சந்தேகத்தையும் தற்போது எழுப்பியுள்ளது.

முன்னதாக நிதியமைச்சர் ஜி.எஸ்.டி. அமலாக்கம் வரலற்றில் ஒரு குறிப்பிடத் தக்க சாதனையாக இருக்கிறது என்பதைப் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மனித கழிவுகளை மனிதர்களை அகற்றுவதனைத் தடுக்கும் விதமாக ரோபோக்கள் பயன்படுத்தப் படும் என்று சென்ற பட்ஜெட்டில் குறிப்பிட்டு இருந்தார். இந்த பட்ஜெட்டிலும் அது தொடர்கிறது என்பது குறையாகவே பார்க்கப் படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஆதிச்ச நல்லூர் உள்ளிட்ட 5 தொல்லியல் இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப் படும். ஆதிச்ச நல்லூரில் சுற்றுலாத் துறையின் மூலம் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் கீழடி குறித்து எதுவும் பேசாதது அரசியல் மட்டத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.