கொரோனா, புபோனிக் பிளேக்கைத் தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய தொற்று!!! பதற வைக்கும் தகவல்!!!
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது. இன்றைக்கு கொரோனா இல்லாத இடத்தை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அளவிற்கும் ஒட்டுமொத்த உலகத்தையும் இந்நோய்த்தொற்று புரட்டி போட்டிருக்கும் நிலையில் அடுத்ததாக புபோனிக் பிளேக், ஸ்வைன் ஃப்ளூ என அடுக்கடுக்காக நோய்த்தொற்று பற்றிய செய்திகள் சீனாவில் இருந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது. தற்போது இத்தனையும் பத்தாது என்று பூச்சிகள் மூலம் புதிய நோய்த்தொற்று பரவி வருவதாக சீனாவின் அதிகராப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
தற்போது பரவ ஆரம்பித்து இருக்கும் புதிய நோய்த்தொற்று நச்சு ஈ, வண்டுகள், உண்ணிகள் போன்ற பூச்சி வகைகளில் இருந்து பரவுவதாகவும் கூறப்படுகிறது. இந்நோய்த்தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவும் தன்மைக் கொண்டது எனவும் கூறப்படுகிறது. பாதிக்கப் பட்ட நபர்களின் ரத்தம், சளி போன்றவற்றில் இருந்து மற்றவர்களுக்கு பரவும் ஆபத்து இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதுவரை இந்நோய்த்தொற்றால் சீனாவில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்நோய் பரவியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சீனாவின் கிழக்கு ஜியாங்ஸ் மாகாணத்தில் 37 பேர் இந்தப் புதிய நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. அதேபோல அன்ஹீ மாகாணத்தில் 23 பேருக்கு இந்நோய்த்தொற்று பரவியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றவர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதால் இப்புது நோய்த்தொற்று குறித்து மக்கள் மத்தியில் தற்போது பீதி ஏற்படவும் செய்திருக்கிறது. ஆனால் ஹியாங்க் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஹெங் ஜி யாங் பூச்சிகளால் பரவும் புதிய நோய்த்தொற்று குறித்து பயப்பட வேண்டாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் பூச்சிகள் கடிக்கும் அபாயத்தில் இருந்து தள்ளியிருக்குமாறு அந்நாட்டு ஊடகங்கள் தற்போது மக்கள் மத்தியில் எச்சரிக்கை செய்ய ஆரம்பித்து இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.