ஆடு மேய்த்தற்காக மற்றவர்கள் காலில் விழ வைத்தச் சம்பவம்… பட்டியல் இனத்தவருக்கு நேர்ந்த கொடுமை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆடு மேய்த்த குற்றத்திற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பால்ராஜ் எனும் நபரை வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் காலில் விழ வைத்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவில்பட்டி அடுத்த ஓலைகுளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் 100 ஆடுகள் கொண்ட பட்டியை வைத்து ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கு எனும் மேல் வகுப்பைச் சேர்ந்த ஒருவரும் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 8 ஆம் தேதி இருவரும் அருகருகே தங்களது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பால்ராஜின் ஒரு ஆட்டுக்குட்டி தவறுதலாக சிவசங்குவின் ஆட்டுகுட்டிகளோடு சேர்ந்து இருக்கிறது. இதைப் பார்த்த பால்ராஜ் உடனே தனது குட்டியை மீட்க சிவசங்குவின் ஆடுகள் இருக்கும் பகுதிக்கு சென்றிருக்கிறார். ஆனால் இந்தச் சம்பவத்திற்கு சிவசங்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து ஆடு மேய்க்கும் குச்சியை எடுத்து பால்ராஜை அடிக்க ஓங்கியதாகவும் கூறப்படுகிறது.
அப்படி குச்சியை ஓங்கும்போது அதை தடுக்க பால்ராஜ் முற்பட்டதாகவும் ஆனால் அந்த குச்சி தவறுதலாக சிவசங்குவின் மீது பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பில் இருந்தும் அவர்களது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கின்றனர். இதில் சிவசங்குவின் உறவினர்கள் எங்களது பகுதிக்கு நீ வந்தது குற்றம் என பால்ராஜை மிரட்டி அவர்களின் கால்களின் விழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின்போது பால்ராஜின் மகன் கருப்புசாமி தனது அப்பாவிற்கு நடக்கும் தாக்குதலை தடுக்க முற்பட்டதாகவும் அதனால் இவரும் தாக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கருப்புசாமி தனது செல்போனில் வீடியோ எடுக்க முற்பட்டபோது அந்த செல்போனை சிவசங்குவின் உறவினர்கள் வாங்கி அதே இடத்தில் உடைத்து எறிந்தும் இருக்கின்றனர்.
ஆனால் பால்ராஜ் மற்றவர்கள் காலில் விழும் காட்சியை சிவசங்குவின் உறவினரான கார்த்திக் எனும் இளைஞர் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனால் இச்சம்பவம் பொதுவெளியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு கோரிக்கையும் வைக்கப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments