close
Choose your channels

Dhuruvangal Pathinaaru Review

Review by IndiaGlitz [ Tuesday, December 27, 2016 • தமிழ் ]
Dhuruvangal Pathinaaru Review
Cast:
Rahman
Direction:
Karthick Naren
Production:
Knight Nostalgia, Filmotainment
Music:
Jakes Bejoy

புதுமுக இயக்குனர; முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரகுமானைத் தவிர கிட்டத்தட்ட மற்ற அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தமிழ்த் திரைக்குப் புதுசு. நட்சத்திர மதிப்பைச் சார்ந்திராமல் ட்ரைலர் மூலம் தன் அறிமுகப் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டார் ’துருவங்கள் பதினாறு’ படத்தை எழுதி இயக்கியிருக்கும் இளைஞர் கார்த்திக் நரேன். ட்ரைலரின் தரத்தால் ஈர்க்கப்பட்டு திரையரங்குக்கு செல்பவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகத் திருப்தி அடைவார்கள் என்று மிகையின்றிச்  சொல்லலாம்.

 

கோயம்புத்தூரில் ஒரு மழை இரவில் அடுத்தடுத்து மூன்று குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. இரண்டு ஆண்கள் இறக்கின்றனர். ஒரு பெண் தொலைந்துபோகிறார்.

 

இந்த மூன்று சம்பவங்களுக்கிடையிலான தொடர்பை ஆராய்ந்து இவற்றுக்குப் பின்னால் இருக்கும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரி தீபக் (ரகுமான்). போலீஸில் புதிதாக சேர்ந்திருக்கும் துடிப்பும் ஆர்வமும் மிக்க இளைஞன் கவுதம் (அஸ்வின்) விசாரணையில் அவருக்கு உதவுகிறார்.

 

தீபக்கும் கவுதமும் சேர்ந்து குற்றவாளியையும் குற்றங்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தையும் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே மீதிக் கதை.

 

2016லிருந்து ஐந்தாண்டுகள் முன்னோக்கி சென்றுவிட்டு 2016ல் நடந்த சம்பவங்களை அசைபோடும் வகையிலான திரைக்கதை அமைப்பை எந்தக் கால மாற்றம் தொடர்பான எந்த குறையும் தெரியாத வகையில் புத்திசாலித்தனமாக கையாண்டிருப்பதிலேயே சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

 

த்ரில்லர் படங்களில் மர்ம முடிச்சுகள் ஊகிக்கப்படக்கூடியதாக இருக்கக் கூடாது. பெரும்பாலான த்ரில்லர் படங்களில் இப்படி இருப்பதில்லை. அல்லது இறுதிவரை ஊகிக்க முடியாமல் இருந்தாலும் மர்மம் அவிழும்போது சொல்லப்படும் குற்றத்துக்கான காரணங்கள் வலுவாக இல்லாமல் ”இதற்குத்தான் இவ்வளவும் பில்டப்பா” என்று தோன்றும் அளவுக்கு அமைந்துவிடும்.  இந்தப் படத்தில் இந்த இரண்டு தவறுகளும் நடக்கவில்லை.

 

குற்றவாளி யார் என்று கடைசி வரை யாராலும் ஊகிக்க முடியவில்லை. இதனால் படம் முழுக்க யோசித்துக்கொண்டே இருக்கிறோம். அதோடு மையக் கதையிலிருந்து எந்த விலகலும் இல்லாமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் பார்வையாளனின் உன்னிப்பான கவனத்தைக் கோரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

 

இதுமட்டுமல்லாமல் இறுதியில் சொல்லப்படும் குற்றத்துக்கான காரணமும் பின்னணியும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் நம்பகத்தனமையுடனும் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு காரணங்களால் இது ஒரு மிகச் சிறந்த த்ரில்லர் படம் ஆகிறது.

 

படம் மையக் கதாபாத்திரத்தின் நீண்ட வசனத்துடன் தொடங்குகிறது. 105 நிமிடங்கள் மட்டுமே ஒடக்கூடிய ஒரு த்ரில்லர் படத்தில் இப்படி ஒன்று தேவையா என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால் அதற்கான சரியான காரணம் இறுதியில் சொல்லப்படுகிறது. இதே போல் படத்தின் முதல் பாதியில் பல இடங்களில் அளவு கடந்த டீடெய்லிங் கொடுத்திருப்பதாகவும், இதனால் திரைக்கதை சற்று தொய்வடைவதாகவும் தோன்றலாம். ஆனால் இறுதியில் அவை அனைத்தும் தேவையானதுதான் என்று சொல்லும் வகையில் படத்தில் காட்டப்படும் சின்ன சின்ன விஷயத்துக்கும் இறுதியில் அவிழும் மர்ம முடிச்சுக்கும் தொடர்பு உள்ளதுபோல் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை உத்தி, கார்த்திக் நரேனை மிகத் திறமை வாய்ந்த இளம் திரைக்கதை எழுத்தாளராக அடையாளப்படுத்துகிறது.

 

திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்வதற்கு வசனங்கள் ஒரு முக்கிய காரணம். காவல்துறையினர் தொழில்முறையாகப் பேசிக்கொள்ளும் விதமும் காவல்துறையில் நன்கு படித்து நல்ல பதவியில் இருக்கும் திறமையான உயரதிகாரி, பேசும் விதமும் வசனங்களில் கச்சிதமாகக் கையாளப்பட்டுள்ளன. இவை ரசிகர்களுக்கு ஒரு புது உலகை அறிமுகப்படுத்துகின்றன. குறிப்பாக தீபக்-கவுதம் இடையிலான உரையாடல்கள் எழுத்தாளர் சுஜாதாவின் கிரைம் புத்திசாலித்தனமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளன.

 

காவல்துறை சார்ந்த வசனங்கள் மட்டுமல்லாமல் மற்ற வசனங்களும் அளவாகவும் அழுத்தமாகவும் உள்ளன.

இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு. படத்தொகுப்பு, கலை இயக்கம் என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் இயக்குனரின் நோக்கத்துக்கு சிறப்பாகத் துணை புரிந்துள்ளன. இவை எல்லாவற்றையும் சிறப்பாக ஒருங்கிணைத்து தரமான திரைப்பட அனுபவத்தைத் தந்திருப்பதில் ஒரு இயக்குனராகவும் முத்திரை பதிக்கிறார் கார்த்திக் நரேன்.

 

ரகுமான், காவல்துறை அதிகாரிக்கான மிடுக்கையும் கம்பீரத்தையும் தோற்றத்திலும் உடல்மொழியிலும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். முகபாவங்களிலும் குறையில்லை. வசன உச்சரிப்பில் கொஞ்சம் சிக்கல்கள் இருந்தாலும் அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இவரது நடிப்பால் இந்த கதாபாத்திரம் வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையில்லை.

 

ஏனைய நடிகர்களில் கவுதமாக நடித்திருக்கும் அஸ்வின், நியுஸ் பேப்பர் பாயாக நடித்திருப்பவர் ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் தன் அனுபவ முத்திரையை பதித்துவிட்டுச் செல்கிறார் டெல்லி கணேஷ்.

 

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை த்ரில்லர் படத்துக்குத் தேவையான விறுவிறுப்பையும் பரபரப்பையுக் கூட்டுகிறது. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு பொருத்தமான ஒளிக் கலவைகளைப் பயன்படுத்தி குற்றவியல் விசாரணைப் படத்துக்கான உணர்வைப் பார்வையாளருக்குக் கடத்துகிறது. முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும் திரைக்கதை, ஒரே நாளில் நடக்கும் நெருக்கடியான சம்பவங்கள் ஆகியவற்றை குழப்பமில்லாமல் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது ஸ்ரீஜித் சாரங்கின் கச்சிதமான படத்தொகுப்பு.

 

குறைகள் இல்லாமல் இல்லை. என்னதான் விறுவிறுப்பாக நகர்ந்தாலும் இரண்டு பாதிகளும் கொஞ்சம் தேவைக்கதிகமாக நீளமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ரொம்ப உன்னிப்பாக லென்ஸ் வைத்துத் தேடினால் திரைக்கதையில் சில லாஜிக் குறைகள் தெரியலாம். குற்றங்களுக்கு சொல்லப்படும் காரணமும் சிலருக்கு சாதாரணமானதாகத் தோன்றலாம். கொஞ்சம் பொழுதுபோக்கு அம்சங்களை சேர்த்திருக்கலாமே என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இவையெல்லாம் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போதுதான் தோன்றும்.

 

எனவே இந்தக் குறைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, தொடக்கம் முதல் இறுதிவரை பார்வையாளரைக் கட்டிப்போடும் ‘துருவங்கள் பதினாறு’ படத்தை மனதாரப் பாராட்டலாம். திரையரங்குக்குச் சென்று படம் பார்த்து இதுபோன்ற திறமைவாய்ந்த புதிய இளைஞர்களை ஆதரிக்கலாம்.

Rating: 3.5 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE