பிரதமருக்கு சத்யராஜ் மகள் வைத்த முக்கிய கோரிக்கை!
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் சமீபத்தில் “மகிழ்மதி இயக்கம்' என்ற இயக்கத்தை ஆரம்பித்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் விரைவில் ஒரு அரசியல் கட்சியில் சேரவிருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ஒரு முக்கிய கோரிக்கையை திவ்யா சத்யராஜ் முன்வைத்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க “மகிழ்மதி என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இப்பொழுது ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரையை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது”
இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.