மெட்ரோ ரயில் கட்டணத்தை அதிரடியாகக் குறைத்த தமிழக முதல்வர்!
கடந்த 5 ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருக்கிறது எனப் பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டி வந்ததை அடுத்து தமிழக முதல்வர் மெட்ரோ ரயில் திட்டத்தின் அதிகப் பட்சக் கட்டணத்தை ரூ.50 என குறைத்து உள்ளார். இந்த விலை, முன்பு இருந்ததை விட பல மடங்கு குறைக்கப்பட்டு உள்ளது.
சென்னை நகரப்பகுதியில் இருந்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப் பட்டது. இதுவரை 54 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள இத்திட்டத்தின் அதிகப்பட்ச கட்டணம் தற்போது ரூ.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாதாரண மக்களும் மெட்ரோ ரயிலில் எளிதாக பயணம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 4 கிலோ மீட்டர் வரை 20 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது அதே கட்டணத்தில் 5 கிலோ மீட்டா வரை பயணிக்க முடியும். அதேபோல் ரூ.30 கட்டணத்தில் 6 கிலோ மீட்டர் வரை பயணித்த பயணிகள், இதே கட்டணத்தில் இனி 12 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். அதாவது முன்பு இருந்த கட்டணத் தொகைக்கு தற்போது இருமடங்கு தூரம் பயணம் செய்ய முடியும்.
முதன்னதாக ரூ.50 க்கு 18 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என்ற நிலையில் தற்போது இந்தக் கட்டணத்தைக் கொண்டு 32 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யமுடியும். அதேபோல முன்னதாக அதிகப்பட்ச கட்டணம் ரூ.70 என இருந்த நிலையை மாற்றி வெறும் 50 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் 70 ரூபாய் கொடுக்க வேண்டிய பயணிகள் 20 ரூபாய் சேமிக்க முடியும். இதனால் சென்னை மெட்ரோவை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிரடியாக உயரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.