புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு சிலை திறப்பு… ஈபிஎஸ்-ஓபிஎஸ் அதிரடி முடிவு!!!
வரும் 17 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதுகுறித்து வெளியான அறிக்கையில் “அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
மேலும் எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவுகளை எப்போதும் நெஞ்சில் சுமந்து உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி மற்றும் வட்ட அளவில் கழகத்தில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைகளுக்கும் அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்” என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து தலைமை கழக நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்து இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்தும் இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.